ஒருவருடைய இன்பத்திலும், துன்பத்திலும் அரவணைப்பு என்பது அடக்க முடியாத உணர்ச்சியாக உள்ளது. நெருங்கிய நண்பர்களை நீண்ட காலத்திற்கு பின்னர் பார்த்தால் ஏற்படும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஓடி வந்து கட்டி அணைத்து நமது அன்பை பகிர்ந்து கொள்வது ஒரு ரகம். அதே போன்று அன்பிற்கு உரியவர்களை இழந்தால் அந்த துன்பத்திலிருப்பவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்வது மற்றொரு ரகம்.
அரவணைப்பு ஒருவருக்கு அருமருந்து என்பதால் உலக நாடுகள் முழுவதும் இந்த கலாச்சாரத்தை தழுவி வருகின்றன. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்ற சீனா, தொடர் பணிச் சுமையினாலும், பிற காரணங்களாலும் மனச் சோர்வு அடைந்த பெண்களை கவரும் வகையில் ‘ஆண் அம்மா‘ க்கள் என்ற புதிய வகை கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சீனாவில் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க இளம் பெண்கள் ஆண் அம்மாக்கள் என்று அழைக்கப்படகூடிய ஆண்களை ஐந்து நிமிடம் அரவணைக்கும் போக்கு இருந்து வருகிறது. இதற்காக அந்த இளம் பெண்கள் ஆண் அம்மாக்களுக்கு 50 யுவான் செலுத்துகின்றனர். அதாவது இந்திய ரூபாயில் 600 செலுத்த வேண்டும்.
சீனாவில் இந்த பழக்கம் வேகமாக வளரக் காரணம், ஒரு பெண் சமூக ஊடக பக்கத்தில் எனது மன அழுத்தத்தை போக்கும் விதமான யாராவது என்னை அரவணைத்துக் கொண்டால் அதற்கு பணம் செலுத்த தயாராக இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாகவே, அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒருவர் குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பதாகவும் தான் கட்டி அணைக்க தயாராக இருப்பதாகவும் எழுதியிருந்தார்.
இந்த அரவணைப்பில் பாதுகாப்பை உயர்ந்ததாகவும், மன அழுத்தத்திலிருந்து வெளி வந்ததாகவும் மறுபதிவை பதிவிட்டிருந்தார். அன்றிலிருந்து, மேன்-மம் என்று அழைக்கப்படக் கூடிய ஆண் அம்மாக்களின் அரவணைப்பிற்கு அமோக வரவேற்பு உள்ளது. இந்த அரவணைப்பில் ஆபாசமோ அல்லது அத்துமீறல்களோ இல்லை என்பதோடு, ஒரு தாயின் அரவணைப்பை இந்த மேன்-மம் வழங்குவதாக பாராட்டுக்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.