The President presented Padma Awards to 65 achievers, including Mammootty, Rohit Sharma, and Madhavan!
டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழா
கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமுக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் உயரிய பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், எஞ்சியிருந்த 65 சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பத்ம விருதுகளின் முழு புள்ளிவிவரம்
இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 131 சாதனையாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் 5 பேருக்குப பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதன் முதற்கட்டமாக, கடந்த மே 25 அன்று 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று எஞ்சிய 65 பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த விழாவில் 2 பேருக்கு பத்ம விபூஷண், 7 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 56 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
முக்கிய விருதுகளைப் பெற்ற ஆளுமைகள்
பத்ம விபூஷண்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நாராயணன் ஆகியோருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருது வழங்கப்பட்டது.
பத்ம பூஷண்: பிரபல ஹிந்திப் பின்னணி பாடகி அல்கா யாக்னிக், மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கே.ஆர். பழனிசாமி, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பத்ம ஸ்ரீ: சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பிரபல நடிகர் மாதவன், இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, தமிழக சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி காளியப்பா கவுண்டர், கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி - காயத்ரி,
கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன் மற்றும் மிருதங்க வித்துவான் திருவாருர் பக்தவச்சலம் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி...
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
====