Tirupati Balaji 121 Kg Gold Donation Chennai Businessman Vardhaman Jain source: Tirumala Tirupati Devasthanams
இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கோடி தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்திய சென்னை தொழிலதிபர்...!

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கிய செய்தி குறித்து....

Kavitha prasanna

Tirupati Balaji 121 Kg Gold Donation Chennai Businessman Vardhaman Jain

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் ஒப்படைப்பு

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் இன்று (நவம்பர் 26) ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

திருப்பதியில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகளிடம் இந்தப் பிரம்மாண்ட காணிக்கையை அவர் முறைப்படி ஒப்படைத்தார்.

திருப்பதி கோயில் வரலாற்றிலேயே ஒரு தனிநபர் இவ்வளவு அதிக அளவிலான தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.

தலை முதல் பாதம் வரை அணிவிக்கப்படும் 45 வகையான ஆபரணங்கள்

ஏழுமலையானின் திருமேனியில் தலை முதல் பாதம் வரை முழுமையாக அணிவிக்கும் வகையில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மொத்தம் 45 வகையான தங்க ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய ஆபரணங்கள்

கிரீடம், சங்கு, சக்கரம், தோள், கை மற்றும் பாதங்களுக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், ஒட்டியாணம் உள்ளிட்ட 45 வகையான ஆபரணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

நாளை சிறப்பு அலங்காரம்

நாளை (நவம்பர் 27) காலை நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குப் பிறகு, வர்த்தமான் ஜெயின் வழங்கிய இந்தப் புதிய 121 கிலோ தங்க ஆபரணங்களைக் கொண்டு ஏழுமலையானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.6,000 கோடி பங்கு விற்பனை

சென்னை தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின், சமீபத்தில் தனது நிறுவனத்தின் 60 சதவீதப் பங்குகளை விற்றதன் மூலம் சுமார் ரூ.6,000 கோடி தொகையைப் பெற்றதாகவும், அதன் நன்றிக்கடனாக ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய காணிக்கைகளின் விவரங்கள்

இதற்கு முன்பாகவும் திருப்பதி தேவஸ்தானத்திற்குப் பல்வேறு முக்கிய நலத்திட்டங்களுக்காக அவர் கோடிக்கணக்கில் காணிக்கைகளை வழங்கியுள்ளார்.

* மின்சாரப் பேருந்துகள் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனல் (SVBC) மேம்பாட்டிற்காக ரூ.7 கோடி.

* தேவஸ்தான கோசாலையில் கால்நடைத் தீவனக் கலவை ஆலை அமைப்பதற்காக ரூ.5 கோடி.

* உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ணும் நவீன இயந்திரத்திற்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

=============