இலங்கை கடற்படையின் அத்துமீறல், இலங்கை மீனவர்கள் கொடுக்கும் பிரச்சினை, கடற்கொள்ளையர்கள் அட்டகாசம், மீன்வளம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், தமிழக மீனவர்கள் கேரளாவுக்கும், அரபிக் கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்கின்றனர்.
ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் :
வளைகுடா நாடுகளில் மீன் வளம் அதிகம் என்பதில், அங்கும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பு வேலைக்கு செல்கின்றனர். அந்த வகையில் ஈரான் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் - இஸ்ரேல் சண்டை காரணமாக சிவகங்கை, உவரி பகுதியை சேர்ந்த 15 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்கள் தொடர்ந்து பணி புரிய முடியாத சூழலும் ஏற்பட்டது.
மீனவர்களுக்கு பாஜக உதவி :
இதுபற்றி தகவல் அறிந்ததும் அவர்களை மீட்க தமிழக பாஜக நடவடிக்கை எடுத்தது. வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஒரு தீவில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை முதற்கட்டமாக வழங்க ஏற்பாடு செய்தார். மற்றொரு தீவில் இருந்த மீனவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீனவர்கள் பத்திரமாக மீட்பு :
மீனவர்களை ஈரானில் இருந்து நேரடியாக விமானம் மூலம் இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை என்பதால், அவர்கள் கப்பல் மூலம் துபாய் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த அவர்கள், பின்னர் சென்னை வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் அவர்களை நயினார் நாகேந்திரன் வரவேற்றார். தங்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக பாஜகவினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மீனவர்கள் நன்றி :
உவரியை சேர்ந்த மீனவர்கள் அஜித் கூறுகையில், ‘சண்டை தீவிரம் அடைந்ததால் எங்களால் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. சாப்பிட உணவு கூடக் கிடைக்காமல் பரிதவித்தோம். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு, எங்களை நிலைமைய தெரிவித்தோம். அவரும், பிரதமர் மோடியும், மத்திய அரசும் எடுத்த உடனடி நடவடிக்கையால், நாங்கள் உயிருடன் தமிழகம் திரும்பியுள்ளோம்” என்று நன்றி பெருக்குடன் தெரிவித்தார்.
மீனவர்களின் அனுபவங்கள் :
மற்றொரு மீனவரான ஆண்டோ பேசுகையில், ” பிப்ரவரி மாதம் ஈரான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றோம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக கடலுக்குச் செல்லவில்லை. தமிழக பாஜகவினரை தொடர்பு கொண்டதால், எங்களுக்கு உணவும், தங்கும் இடமும் கிடைத்தது. தமிழக அதிகாரிகள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை. 15 மீனவர்கள் கொண்ட எங்கள் குழு பத்திரமாக மீட்கப்பட்டது. மற்ற தீவுகளில் மேலும் பல மீனவர்கள் தவிக்கிறார்கள்” என்றார்.
தமிழக பாஜகவுக்கு நன்றி :
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணி என்ற மீனவர் தனது அனுபவங்களை கூறுகையில், “ சண்டை காரணமாக நாங்கள் தங்கியிருந்த பகுதி பதற்றத்துடன் இருந்தது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்ல ஜிபிஎஸ் கருவி தேவை. ஆனால், அது எங்களுக்கு வழங்கப்படவில்லை. எங்கள் படகு உரிமையாளரும் எந்த உதவியையும் செய்ய முன்வரவில்லை. ஜூன் 13ம் முதல் மீன்பிடி படகிலேயே இருந்தோம்.காப்பாற்றுமாறு நாங்கள் விடுத்த கோரிக்கை பற்றி கேள்விப்பட்ட நயினார் நாகேந்திரன், உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு எங்களை பத்திரமாக மீட்டார்” என்று நன்றி தெரிவித்தார்.
ஈரான் கடல் பகுதியில் வேறுசில தீவுகளில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க பாரதிய ஜனதா கட்சி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்.
====