தீபத்தூணில் தீபம் - நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூண் தூணில், கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்ததால் பாரம்பரிய கார்த்திகை தீபத்தை ஏற்ற முடியவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூண் என நம்பப்படும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது.
ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி
விசாரணையில் அந்த தீர்ப்புக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தாலும், நடப்பாண்டு ஒருமுறை மட்டும் விளக்கேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை.
விளக்கேற்ற முழுமையான முயற்சிகள்
உத்தரவு செயல்படுத்தாதது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததை ஏற்று, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு
ஆனால் தீபத்தூனில் விளக்கேற்றுவது நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் மீறும் என்று வாதிட்டு, கோயில் நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றல்
இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை அன்று தீபத்தூனில் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள அதன் வழக்கமான இடத்தில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது” என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்மனுதாரர் குற்றச்சாட்டு
இதனிடையே, தீபத்தூண் என நம்பப்படும் இடத்தில் விளக்கேற்ற வேண்டும் என வழக்கை தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவரான ராம ரவிக்குமார், தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாததை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.
முறைப்படி தாக்கல் செய்த உத்தரவு
ஆனால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க மறுத்து, மனுதாரர்களை முறைப்படி மனு தாக்கல் செய்யுங்கள், தேவைப்பட்டால் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்துள்ளார்.
அறங்காவலர் குழு நிலை என்ன?
திருப்பரங்குன்றம் இணை ஆணையர் நேற்று வெளியிட்டு இருந்த அறிக்கையில், “ திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.
இத்தகைய நீண்ட காலந்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் சமய மரபுகள் மற்றும் சடங்குகள், ஆகம விதிகள் ஆகியவை திருக்கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
அவற்றை பின்பற்றி வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும். அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் ஐத்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
=====================