UGC Fake Universities List 2026 source: ai generated
இந்தியா

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு முன் அங்கீகாரத்தை உறுதி செய்யுங்கள்: மாணவர்கள், பெற்றோர்களுக்கு UGC எச்சரிக்கை!

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் போலி பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக யுஜிசி மாணவர்களை எச்சரித்துள்ளது.

Kavitha prasanna

UGC Public Advisory November 2026 Verify Educational Institutions Fake Universities List

இந்தியாவில் போலியாக நடத்தப்பட்டு வரும் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 - லிருந்து 32 -ஆக அதிகரித்து உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக கூடுதல் தகவலாக, 18 போலியான பல்கலைக் கழகங்கள் இன்னும் பட்டியலில் நீடித்து வருவதாகவும் யுஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் யுஜிசி பொது அறிவிப்பு

இதன் காரணமாக நாடு முழுவதும் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்கு முன்பாக அல்லது கட்டணம் செலுத்துவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய பொது அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9, 2026 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கை அறிவிப்பை யுஜிசி வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சரிபார்க்க வேண்டிய 4 முக்கிய அம்சங்கள்

கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன்பாகவோ அல்லது கல்வி மற்றும் நிதி சார்ந்த எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடுவதற்கு முன்பாகவோ கீழ்க்கண்ட 4 விஷயங்களை உறுதி செய்து கொள்ளுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1. சட்டப்பூர்வ அங்கீகாரம்

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் முறையாக நிறுவப்பட்டுள்ளதா அல்லது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

2. பட்டம் வழங்கும் அதிகாரம்

பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் 1956 (UGC Act, 1956) மற்றும் பிற சட்டங்களின் கீழ், குறிப்பிட்ட பாடப்பிரிவை நடத்தவும், அதற்கான பட்டம் அல்லது தகுதிச் சான்றிதழை வழங்கவும் அந்த நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதி

யுஜிசி மற்றும் சம்பந்தப்பட்ட பிற சட்டப்பூர்வ ஒழுங்குமுறை ஆணையங்களிடம் இருந்து தேவையான அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.

4. கல்வி பயிலும் முறை மற்றும் மையங்களின் அனுமதி

தொலைதூரக் கல்வி, ஆன்லைன் கல்வி , வளாகத்திற்கு வெளியே உள்ள மையங்கள் மற்றும் படிப்பு மையங்கள் ஆகியவற்றின் மூலம் பாடங்களை நடத்தவும், குறிப்பிட்ட இடத்தில் கல்வி வழங்கவும் சட்டப்படி அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

விளம்பரங்களை மட்டும் நம்பி ஏமாற வேண்டாம்

கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், இணைப்பு மற்றும் பட்டம் வழங்கும் அதிகாரம் குறித்து அந்தந்த நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள், இணையதளங்கள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளை மட்டும் நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது.

இத்தகைய தகவல்களை யுஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ugc.gov.in/ மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்களின் இணையதளங்கள் மூலம் சுயாதீனமாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எளிதில் சரிபார்ப்பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலையும், அங்கீகரிக்கப்படாத 32 போலிப் பல்கலைக்கழகங்களின்மாநில வாரியான பட்டியலையும் யுஜிசி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

எனவே, கட்டணம் செலுத்துவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கல்வி நிறுவனத்தின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

======================