இந்தியாவில் டிஜிட்டல் சேவை
UPI Transactions Service in Qatar Country : இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றன. சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது டிஜிட்டல் இந்தியாவின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மாதம் தோறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன.
கத்தாரிலும் யுபிஐ சேவை
தற்போது என்.பி.சி.ஐ., இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ், கத்தாரின் மிகப்பெரிய வங்கியான கத்தார் நேஷனல் பேங்க் உடன் இணைந்து இந்த சேவையை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, கத்தார் முழுவதும் உள்ள கடைகளில், கியு.ஆர். குறியீட்டின் மூலம் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
கத்தாரில் பணம் மாற்ற தேவையில்லை
கத்தாரில் யுபிஐ சேவையை மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். கத்தாருக்கு செல்லும் இந்தியர்கள் இனி கரன்சி எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டிய தேவையில்லை. தங்கள் மொபைல் போன் வாயிலாகவே எளிதாக பணம் செலுத்த முடியும். கத்தாரில் துவங்கப்பட்டு உள்ள யு.பி.ஐ., சேவை, இந்திய பயணிகளுக்கு பெரும் வசதியை அளிப்பதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்த உதவிகரமாக இருக்கும்.
டிஜிட்டல் முறையில் திருப்புமுனை
இது குறித்து பியூஷ் கோயல்(Piyush Goyal Qatar UPI Payment) வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கத்தாரின் தோஹாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் இந்தியாவின் சொந்த யுபிஐ சேவையை தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறோம். இது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு ஒரு திருப்பு முனையாக அமையும்.
மேலும் படிக்க : UPI பரிவர்த்தனை வரம்பு 10 லட்சமாக அதிகரிப்பு : 15ம் தேதி அமல்
எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் 'டிஜிட்டல் இந்தியா' முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேலும் அதிகரிக்கும். கத்தாருக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
============