மக்களுக்கான ரேஷன் கடைகள்
24 Hours Ration ATM : ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதில் நாளுக்கு நாள் நவீன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் பொருட்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
தானிய ஏடிஎம் திட்டம்
இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தானிய ஏடிஎம் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அமலுக்கு வந்தவுடன், ஏழை எளிய மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
ரேஷன் பொருட்கள் விநியோகம் - குளறுபடிகள்
லட்சக் கணக்கான கிராம மக்கள் ரேஷன் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்தே வாழ்ந்து வருகிறார்கள். ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்குவதிலும் சிரமங்கள் உள்ளன.
பண ஏடிஎம் போலவே செயல்படும்
இவற்றை எல்லாம் செய்யும் விதமாக, தானிய ஏடிஎம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதை போன்று, தானிய ஏடிஎம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
சரியான எடையில் உணவு தானியங்கள்
இந்த இயந்திரங்களில் ரேஷன் அட்டையை பயன்படுத்தி அல்லது ஆதார் எண்ணை பயன்படுத்தி தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, அரசு நிர்ணயித்துள்ள அளவுகளில் தேவையான தானியங்கள், அரிசி போன்றவற்றை துல்லியமான எடையில் பெற்றுக் கொள்ளலாம்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
* தானிய ஏடிஎம் திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்
* வேலைக்கு செல்வோர், கூலி தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள வசதியாக இருக்கும்
* ரேஷன் கடைகளில் நடைபெறும் எடை மோசடி போன்று இந்த இயந்திரங்களில் தவறே நடக்காது.
* துல்லியமான எடையில் தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு
* பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுவதால் தகுதியான பயனாளிகள் மட்டுமே பொருள்களை பெற முடியும்
* போலி ரேஷன் கார்டுகள் இதன் மூலம் முழுமையாக தடுக்கப்பட்டு, ஒழிக்கப்படும்
* அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் பயனாளிகள் ஏடிஎம் தானிய இயந்திரத்தின் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியா முழுவதும் விரிவாக்கம்
இந்த தானிய ஏடிஎம் திட்டம் தற்போது ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற ஒரு சில மாநிலங்களில் பரிசோதனை முறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நல்ல வரவேற்பை கிடைத்து வருவதால் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை மத்திய அரசு விரிவாக்கம் செய்ய உள்ளது.
ரேஷன் விநியோகத்தில் புரட்சி
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "ரேசன் விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் இந்த தானிய ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் இந்தியா முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளிலும் நிறுவப்படும்" என்று தெரிவித்தார்.
தலைசிறந்த பொது விநியோகம்
இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் பொது விநியோக முறை உலகிலேயே மிக சிறந்த மற்றும் வெளிப்படையான தொழில்நுட்பத் திட்டமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
==============