இந்தியா மீது 50 சதவீத வரி :
Donald Trump Invite PM Modi for Free Trade Agreement : இந்தியா மீது முதலில் 25 சதவீத வரி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதித்து கெடுபிடி காட்டினார் அதிபர் டிரம்ப். இரு தினங்களுக்கு முன்பு கூட இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க அவர் யோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
விரிந்த நட்பு, அதிர்ந்த டிரம்ப்
அமெரிக்காவின் கெடுபிடி நடவடிக்கை இந்தியா - சீனா - ரஷ்யா - பிரேசிலின் நட்புறவை வலுப்படுத்தியது. இதனால் டிரம்ப் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார், அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியா மீது திடீர் பாசத்தை பொழிந்து இருக்கிறார் டொனால்டு டிரம்ப்.
இந்தியா மீது பாசம் காட்டும் டிரம்ப்
பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர், “இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மோடி வரவேற்பு, நட்புக்கு ஆதரவு
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியும், ”இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இயல்பான கூட்டாளிகள். நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையற்ற திறன்களை கண்டெடுக்க உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் டிரம்புடன் பேசுவதை நானும் எதிர்நோக்கியுள்ளேன். இரு நாட்டு மக்களுக்கும் வளமான, பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் உழைப்போம்” என்று பதிலளித்துள்ளார்.
டிரம்பை நம்பக் கூடாது
இந்தியாவிடம் சமரசம் என்ற அளவில் டிரம்ப் இறங்கி வந்தாலும், பெரிய தொழிலதிபரான அவர் அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஒருபுறம் பேச்சுவார்த்தை மறுபுறம் குடைச்சல் என்ற வகையில் தான் இந்தியாவிடம் அவர் நடந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
==============