இந்தியாவில் தங்கத்திற்கு மவுசு
Uttarakhand Village Fine on Gold Ornaments : தங்கத்திற்கு இந்தியர்கள் கொடுப்பது போல, வேறு எந்த நாட்டிலும் முக்கியத்துவம் கிடையாது. நாம் மட்டும் தான் தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கிறோம். குறிப்பாக, பெண் பிள்ளைகளை இருக்கும் வீட்டில் தங்க நகைகளை பெற்றோர் தொடக்கம் முதலே சேமிக்க வைத்து வருவார்கள். திருமணத்தின் போது அவர்களுக்கு அணிவித்து அனுப்பப்படும் நகைகள், அவர்களுக்கான சொத்தாக இருக்கும். ஆபத்துக்கு உதவக்கூடிய வகையிலும் நகைகள் பயன்படுத்தி கொள்ளப்படும்.
எட்டாக் கனியாகும் தங்கம்
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை எட்டி விடும் என்றே தெரிகிறது. இதன்காரணமாக நடுத்தர குடும்பங்களில் தங்கம் வாங்குவது என்பது எட்டாக் கனியாகி விடும் போல இருக்கிறது. நஇருக்கிறது. இதனால், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.
கிராமத்தில் வித்தியாசமான உத்தரவு
இப்படி, நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்த்து வைப்பது போல, உத்தரகாண்டில் உள்ள ஒரு கிராமத்தில் வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சக்ராதா என்ற அந்த கிராமத்தில் ஊர் பெரியவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளனர்.
குறைவான நகைகள் அணிய வேண்டும்
அதன்படி, பெண்கள் வெளியில் வரும் போது தாலி, மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தவிர்த்த வேறு நகைகள் எதையாவது வெளியில் வரும் போது அணிந்தால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
நகைகள் அணிவது ட்ரெண்டிங்
சக்ராதா கிராமத்தில் அதிக அளவில் நகைகளை அணிவது ட்ரெண்டாகி விட்டதால், அதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
சில ஆண்டுகளாக அதிக நகை போட்டுக்கொள்வது புது ட்ரெண்டாக மாறியிருக்கிறதாம். ஆண்கள் அரசு வேலைக்கு செல்வதால், வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறது. இதனால், அவர்களின் வீட்டு பெண்கள் விதவிதமாக டிசைன்களில் நகைகள அணிந்து மற்றவர்களை வெறுப்பேற்றுகின்றனர்.
கிராம மக்கள் வரவேற்பு
25 சவரன் வரை கூட பெண்கள் நகை அணிவதால், சாமான்ய வீட்டு பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது சமூகத்தில் ஒருவித அழுத்தத்தை கொடுப்பதால், அதை தடுக்கவும், கிராமத்தில் அனைவரையும் சமமாக நடத்தும் வகையில் தங்க நகைகள் அணிய தடையானது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கிராம மக்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மதுவுக்கு தடை விதிக்க கோரிக்கை
அடுத்தபடியாக மதுவிற்கும் இதுபோன்ற தடையை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் குரலை உயர்த்தி இருக்கிறார்கள். சமூக நிகழ்வுகளில் கூடும் போது, மது அருந்துவது வாடிக்கை. ஆனால், சில ஆண்டுகளாக வெளிநாட்டு மதுபானங்களை பலர் வாங்குவதால், உள்ளூர் வியாபாரம் பாதிக்கபடுவது மட்டுமின்றி, பொருளாதார இழப்பும் ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
=========================