Vande Mataram Controversy Puts Kerala Minister K. Muraleedharan in the Spotlight Google
இந்தியா

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை... : கேரள அமைச்சர் வி.கே முரளிதரனுக்கு பாஜக கடும் கண்டனம்!

கேரளா அரசு நிகழ்ச்சியின்போது வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்ட நிலையில், முதல் இரண்டு சரணங்களுக்கு பிறகு அமர்ந்துகொண்ட அமைச்சர் கே. முரளீதரன் இந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

NARENDRAN K

வந்தே மாதரம் பாடலால் வெடித்த சர்ச்சை:

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள முல்லேரியா குடும்ப நல மருத்துவமனையில் புதிய ஆய்வகக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.

முரளீதரன், காசர்கோடு எம்.பி ராஜ்மோகன் உன்னித்தான், எம்.எல்.ஏ கல்லட்ரா மஹின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதன்யா சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. முதல் இரண்டு சரணங்கள் முடிந்ததும் மேடையில் இருந்த அமைச்சர் உள்ளிட்டோர் மீண்டும் தங்களது இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர்.

ஆனால், பாடலின் மீதமுள்ள சரணங்களை பாஜகவைச் சேர்ந்த இரண்டு பெண் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தொடர்ந்து பாடினர். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அமைச்சர் மீது பாஜக கடும் விமர்சனம்:

வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்படுவதற்கு முன்பே அமைச்சர் உள்ளிட்டோர் அமர்ந்துகொண்டது தேசியப் பாடலுக்கு அவமதிப்பு செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் கே. முரளீதரன், எம்.பி ராஜ்மோகன் உன்னித்தான், எம்.எல்.ஏ கல்லட்ரா மஹின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதன்யா சுரேஷ் ஆகிய நான்கு பேர் மீதும் பாஜக காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

மேலும், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

பாஜகவுக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி:

இதற்கிடையே, பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே. முரளீதரன் பதிலளித்துள்ளார். இது மாநில அரசின் நிகழ்ச்சி என்றும், நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையில் இறைவணக்க பாடல் மட்டுமே இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்பதே கேரள அரசின் நடைமுறை என்றும் கூறியுள்ளார்.

"நான் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகன். எனக்கு யாரும் தேசப்பற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை" என்றும் பாஜகவின் விமர்சனங்களுக்குபதிலளித்துள்ளார்.

காவல்துறையில் புகார் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்த விவகாரத்தில் காவல்துறையில் புகார் அளித்துள்ள பாஜக, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

=====================