Vardhaman Jain Radhika Jain Chennai Tirupati 121 Kg Gold Donation source: ttd, X
இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை: என்னென்ன ஆபரணம் ? யார் இந்த சென்னை தம்பதி தெரியுமா? முழு விவரம்...!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பதி , திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.207.6 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வழங்கினர்.

Kavitha prasanna

Vardhaman Jain Radhika Jain Chennai Tirupati 121 Kg Gold Donation Details

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் பிரம்மாண்ட காணிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ வர்த்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஜெயின் ஆகியோர் ஏழுமலையானுக்கு ரூ.207.6 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

திருப்பதியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு பங்கேற்ற விசேஷ நிகழ்ச்சியில், கோயில் தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்த நகைகள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. இந்த நன்கொடை வெறும் பொருளாதார மதிப்பிற்காக மட்டுமல்லாமல், ஏழுமலையான் மீது அந்தத் தம்பதி கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக தேவஸ்தான நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

121 கிலோ தங்கம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது?

செய்கூலி மற்றும் தயாரிப்பு செலவுகள் உட்பட ரூ.207.6 கோடி மதிப்பிடப்பட்டுள்ள இந்த 24 காரட் சுத்தத் தங்கம் இரண்டு கோயில்களுக்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில்

106 கிலோ (24 காரட்) தங்கம் பயன்படுத்தப்பட்டு, 33 வகைகளைச் சேர்ந்த மொத்தம் 46 அற்புதமான ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்

எஞ்சிய 15 கிலோ (24 காரட்) தங்கம், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்குத் தங்க வஸ்திரம் தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த நவரத்தினக் கற்களின் விவரம்

இந்தத் தங்க ஆபரணங்களின் அழகை மெருகூட்டும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன:

வைரங்கள்: 238.2 காரட் எடை கொண்ட வைரங்கள்.

நவரத்தின மற்றும் விலையுயர்ந்த கற்கள்: 2,247.7 காரட் எடையுள்ள கற்கள்.

நீல சபையர்கள் (Blue Sapphires) : 91.6 காரட்.

மஞ்சள் சபையர்கள் (Yellow Sapphires): 84.2 காரட்.

மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள்: 2,916.5 கிராம் எடை கொண்ட மாணிக்கம், மரகதம் மற்றும் புனித சாலிகிராமக் கற்கள்.

காணிக்கையாக அளிக்கப்பட்ட 46 தங்க ஆபரணங்கள் என்னென்ன?

1. திருமுடி மற்றும் கவசங்கள்: கிரீடம் - 1, சங்கு கவசம் - 1, சக்ர கவசம் - 1, சீமா கவசம் - 1.

2. திருக்கை மற்றும் திருவடி ஆபரணங்கள்: பாத கவசம் - 2, கால்கோல்கள் - 2, அபயஹஸ்த கை காப்புகள் (வளையல்கள்) - 5, வைகுண்ட அஸ்தம் - 1, கடி அஸ்தம் - 1, புஜகீர்த்திகள் (தோள்பட்டை ஆபரணங்கள்) - 2.

3. நாகாபரண வகைகள்: நாகாபரணம் - 2, நாகாபரண ஒட்டியாணம் - 1, நாகாபரண கால் காப்புகள் - 2.

4. ஆரங்கள் மற்றும் மாலைகள்: சாலிகிராம ஆரம் (2 பாகங்கள்) - 2, கமலால திரிபூஜ சாலிகிராம ஹரம்ஸ் (தாமரை மற்றும் முக்கோண நெக்லஸ்கள் - 2 பாகங்கள்) - 2, அஷ்டோத்தர ஷதநாம தங்க காசு ஆரம் - 1, அஷ்டோத்தர இலை ஆரம் - 1, சதுர்பூஜ லக்ஷ்மி ஆரம் - 1, துளசி இலை மாலை - 1, முத்து மணி ஆரம் - 1, புலி நகம் பதக்கம் - 1.

5. கழுத்து மற்றும் காது அணிகலன்கள்: கழுத்தணிகள் - 1, தங்க கழுத்து ஆபரணம் - 1, சந்தனவங்க காந்தி (சோக்கர்) - 1, கர்ண பத்திரங்கள் (காதணிகள்) - 2, வங்கிகள் - 2.

6. இதர மங்கள ஆபரணங்கள்: ஒ்டியாணம் - 1, சங்கிலி - 1, வெள்ளி பூணூல் - 1, தங்க மலர் - 1, வைஷ்ணவம் - 1, போகடா - 1, மொளச்சேயி - 1.

தொழிலதிபர் ஸ்ரீ வர்த்தமான் ஜெயின் பின்னணி என்ன?

திருப்பதிக்கு இவ்வளவு பெரிய காணிக்கையை வழங்கியதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்ரீ வர்த்தமான் ஜெயின், தொழில்துறையில் மட்டுமன்றி சமூக நலப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

தொழில் மற்றும் காப்புரிமை

சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் பெரிய அளவிலான பிபிஓ நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நிறுவனங்களின் வளர்ச்சி, வியூகத் திட்டமிடல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், சுகாதாரத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்காகப் பல காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.

இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் ஸ்டார்ட்அப் ஊக்குவிப்பு

பின்தங்கிய பொருளாதாரப் பின்னணி கொண்ட இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 'ஆவிஷ்கார்' அமைப்பின் நிறுவனராகச் செயல்படுகிறார். மேலும், இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் 'சென்னை ஏஞ்சல்ஸ்' குழுமத்திலும் முக்கிய உறுப்பினராக உள்ளார்.

குழந்தைகள் நல மருத்துவ சேவை

காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகப் பொறுப்பு வகித்து, ஏழை எளிய குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறார்.

========