தேசிய இளைஞர் தின நிகழ்வு
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்' என்ற மாபெரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான புதுமையான யோசனைகள் மற்றும் தீர்வுகளை நாட்டின் பிரதமரிடம் இளைஞர்கள் நேரடியாகத் தெரிவிக்கும் தளமாக இது அமைந்துள்ளது.
2027 நிகழ்வுக்கான தேர்வு முறைகள்
2027 ஜனவரியில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கான தேர்வுகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நாடு முழுவதும் தற்போது தொடங்கியுள்ளன.
இதுகுறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு இயக்குநர் செந்தில்குமார், இந்தத் தேர்வு மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.
5 கட்டப் போட்டிகளின் விவரங்கள்
முதற்கட்டமாக ஆன்லைன் வினாடி-வினா நடைபெற உள்ளது. 'மை பாரத்' mybharat.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய ஆன்லைன் வினாடி-வினா போட்டி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.
இரண்டாம் கட்டமாக கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி அக்டோபர் 5 முதல் அக்டோபர் 19-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
மூன்றாம் கட்டமாக மாவட்ட அளவிளான PPT. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 50 கட்டுரைகள் மாவட்ட அளவிலான PPT விளக்கக்காட்சி சுற்றுக்குத் தேர்வாகும்.
இது நவம்பர் 10 முதல் 16 வரை கடல்சார் பொருளாதாரம், மனிதவளம், உலகளாவிய போட்டித்திறன் ஆகிய கருப்பொருள்களின் அடிப்படையில் நடைபெறும்.
நான்காம் கட்டமாக மாநில அளவிலான உரையாடல் போட்டிகள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும்.
ஐந்தாம் கட்டமாக தேசிய அளவிளான இறுதிப் போட்டிகள் ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் 'மை பாரத்' mybharat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை தமிழகத்திலிருந்து சுமார் 70,000 இளைஞர்கள் இதில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
=====