Voting for the assembly elections is underway in three states - Kerala, Assam,Puducherry google
இந்தியா

புதுச்சேரி, கேரளம்,அசாமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு : என்.ரங்கசாமி, பினராயி விஜயன் வாக்களித்தனர்...

கேரளம்,அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Kannan

ஐந்து மாநிலத் தேர்தல்

தமிழ்நாடு, கேரளம் புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும், மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப்.29ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு

கேரளம், புதுச்சேரி, அசாமில் கடந்த 23 நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் 883 வேட்பாளர்கள்

கேரளா: கேரளாவில் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 30,495 மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

2 கோடியே 71 லட்சத்து 42 ஆயிரத்து 952 வாக்காளர்கள் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர்.

வாக்குப்பதிவுக்காக 1.46 லட்சம் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். .

140 கம்பெனி துணை ராணுவம், 20 கம்பெனி தமிழ்நாடு போலீஸ் உள்பட 76 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்களுக்கு அல்வா

தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அல்வா வழங்கப்பட்டு வருகிறது. 2 கிமீ வரை தொலைவில் உள்ள மையங்களில் வாக்களிக்க செல்வதற்கு ஊபர் நிறுவனத்துடன் இணைந்து இலவச ஆட்டோ சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

அசாமில் விறுவிறுப்பான தேர்தல்

126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 35 மாவட்டங்களில் அமைந்துள்ள 31,490 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

1.25 கோடி பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 318 பேர் உட்பட, மொத்தம் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பாஜக 90 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மொத்த வேட்பாளர்களில் 59 பேர் பெண்கள் ஆவர்;

புதுச்சேரியில் வாக்குப்பதிவு

30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 9.50 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்

இதற்காக 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

===================