பிகார் முதற்கட்ட தேர்தல்
பிகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. களத்தில் நேரடியாக மோதும் தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முதன்முறையாக தேர்தலை சந்திக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டது.
பாதுகாப்பு பணியில் துணை ராணுவம்
பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வாக்குப்பதிவு நடைபெறும் 121 தொகுதிகளிலும், வாக்குச் சாவடிகளுக்கு தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பிகார் தேர்தல் - ஒரு பார்வை
பிகார் சட்டமன்ற தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் 29 தொகுதிகள், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
7.43 கோடி வாக்காளர்கள்
இரண்டு கட்ட தேர்தலிலும் சேர்த்து மொத்தம் 7.43 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 3.92 கோடி பேர் ஆண்கள். 3.51 கோடி பேர் பெண்கள். முதல் கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,192 பேர் ஆண்கள், 122 பேர் பெண்கள். ஆர்ஜேடி மூத்த தலைவரும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சதீஷ் குமார் களத்தில் நிற்கிறார்.
45,341 வாக்குச்சாவடிகள்
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்.
7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு
அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். வரும் 11ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும். அப்போது 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
================