'Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) BIll 2025 Passed In Lok Sabha : ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பின்னர் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் ( (MGNREGA), என மாற்றம் செய்யப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.
விபி ஜி ராம் ஜி (VB G RAM G) மசோதா
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பதிலாக (MGNREGA), மத்திய பாஜக அரசு விபி ஜி ராம் ஜி (VB G RAM G) மசோதாவை கொண்டு வந்தது. நேற்று நள்ளிரவு வரை இந்த மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் குரல் வாக்கெடுப்பு
இதைத்தொடர்ந்து, இந்த மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து, நாள் முழுவதும் மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா. ஒத்தி வைத்தார்.
மசோதா நிறைவேற்றம்
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய மசோதா, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது, மகாத்மாக காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்கிறது என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இருப்பினும், தற்போது மக்களவையில் விபி ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை
விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் கொண்டு வரப்படும் இச்சட்டம் மூலம், 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.
புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
* 100 நாட்கள் வேலை, 125 நாட்களாக உயர்த்தப்படும்.
* வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும்
* ஊதியம் இதற்கு முன்பு வழங்கப்பட்டதை விட குறைவாக இருக்காது
* வாரந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்
* 15 நாட்களுக்குள் வேலை வழங்காவிட்டால், அதற்கான படி தொகையை மாநில அரசுகளே வழங்க வேண்டும்
* பயோமெட்ரிக் அங்கீகாரம் உள்பட விரிவான டிஜிட்டல் முறையில் வேலை வாய்ப்பு
* ஜி.பி.எஸ்., அல்லது மொபைல் போன் வழியாக பணியிடத்தை மேற்பார்வையிடுதல்
* மோசடிகளை தடுக்க ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
* இதற்கு முன், 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. இனி, 60 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்
* புதிய சட்டம் அமலான ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை மாநில அரசுகள் முடிக்க வேண்டும்
* அதன்பின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்
* ஒப்புதலான தொகையை விட கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டால், அதற்கான செலவுகளை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
==================