ரயில் பயணம் என்றாலே ஜன்னல் வழியாக இயற்கை அழகை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று.
மலைகள், காடுகள், ஆறுகள் எனப் பல அழகிய காட்சிகளை இன்னும் சிறப்பாக ரசித்தபடி பயணம் செய்ய இந்திய ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் விஸ்டாடோம் ரயில் பெட்டிகள்.
கண்ணாடிக் கூரை, பெரிய ஜன்னல்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்ட இவை சுற்றுலாப் பயணிகளிடையே கவனம் பெற்றுள்ளன.
விஸ்டாடோம் என்பது தனி ரயிலின் பெயர் மட்டுமல்ல இயற்கைக் காட்சிகளைப் பரந்த கோணத்தில் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பெட்டியாகும்.
இதன் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கட்டுப்படுத்தக்கூடிய கூரை கண்ணாடிகள் மூலம் பயணிகள் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.
இந்திய ரயில்வேயின் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-லும் இந்த வகைப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விஸ்டாடோம் பெட்டிகளில் பெரிய ஜன்னல்கள், கண்ணாடிக் கூரை, வசதியான இருக்கைகள், சில பெட்டிகளில் இருக்கைகளைத் திருப்பும் வசதி, பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை இடம்பெறுகின்றன.
இதனால் மலைப்பாதைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், ஆறுகள் மற்றும் காடுகள் வழியாகச் செல்லும்போது பயண அனுபவம் மேலும் சிறப்பாக அமைகிறது.
மதுரை–குருவாயூர் :
முதற்கட்டமாக மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் பெட்டியை இணைத்து இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணம் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பெட்டியில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், கண்ணாடி மேற்கூரை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
அடிப்படைக் கட்டணம் ரூ.515; மதுரை முதல் குருவாயூர் வரையிலான முழுப் பயணக் கட்டணம் ரூ.1,875 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத் தேதி மற்றும் இருக்கை இருப்பைப் பொறுத்து இறுதிக் கட்டணத்தை அதிகாரப்பூர்வ ரயில்வே முன்பதிவு தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
=======================