தேர்தலில் பெண்களின் பங்களிப்பு
5 State Assembly Elections 2026 : ஒரு காலத்தில் அரசியல், தேர்தல், வாக்கு என்பது எல்லாம் குடும்பத் தலைவர் எடுக்கும் முடிவாக இருந்தது. அவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அந்தக் கட்சிக்கு, வேட்பாளருக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் வாக்களித்து விட்டு வருவார்கள். ஆனால், அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது.
விழிப்புணர்வு மிக்க பெண் வாக்காளர்கள்
வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் அவர்களின் அரசியல் விழிப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் நிறுத்தி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘நிர்ணய சக்தியாக’ பெண் வாக்காளர்கள் உருவெடுத்து விட்டார்கள்.
வாக்களிப்பது சொந்த உரிமை
வாக்களித்தல் அவர்களது சுயசார்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் காரணமாக கடந்த ஐந்து தேர்தல்களில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்களே வாக்களித்து (Turnout) வந்திருப்பதைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பெண் வாக்காளர்கள் 48 கோடி
இந்தியாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 99.1 கோடி. இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 48 கோடி.
தேசிய அளவில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 லட்சம் அதிகம் உள்ளனர்.
பெண் வாக்காளர்கள் அதிகம்
ஐந்து மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் 7.15 கோடி, மகாராஷ்டிரத்தில் 4.50 கோடி, மேற்கு வங்கத்தில் 3.73 கோடி, பிஹாரில் 3.51 கோடி, தமிழ்நாட்டில் 2.89 கோடி என பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்த ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி. ஆனால், ஆண்களைவிட 12 லட்சம் பெண் வாக்காளர்கள் இங்கு அதிகம் உள்ளனர்.
மௌனப் புரட்சி செய்யும் பெண்கள்
அதேபோல் பாலின விகித அடிப்படையில் தமிழ்நாட்டில் 1,000 ஆண் வாக்காளர்களுக்கு ஏறக்குறைய 1,044 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த விகிதம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றும் ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ (Swing Voters) என்கிற மௌனப் புரட்சியாளர்களாக, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக (Deciding Factor) பெண் வாக்காளர்களைக் கருத வைக்கிறது.
தேர்தலுக்கு முன்பு முடிவு எடுக்கும் பெண்கள்
ஆண்களைவிட எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் முதன்மை வாக்குவங்கியாகப் (Primary vote bank) பார்க்கப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம், பெண் வாக்காளர்கள் தேர்தல் நாளுக்கு முன்பாக தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தில் பலமுனைப் போட்டி
தமிழகம் உள்படப் பெரும்பாலான மாநிலங்களில் மூன்று முதல் நான்கு அணிகளாக அரசியல் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. எனவே, பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது 5,000 முதல் 20,000 வாக்குகளுக்குள்ளா சுருங்கி விடுகிறது.
வெற்றி - பெண்கள் கையில்
அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், பெண் வாக்காளர்களில் 2 முதல் 5 சதவீதம் பேர் இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் தேர்தல் முடிவுகள் மாறிவிடுகிறது. இது கடந்த பல தேர்தல்களில் நடந்திருக்கிறது. வாக்களிக்கும் பெண்கள், எல்லாப் பெரிய கட்சிகளுக்கும் அவற்றின் வாங்கு வங்கியின் அஸ்திவாரமாகத் திகழ்கிறார்கள்.
நடுநிலை பெண்களின் கையில் முடிவு
ஆனாலும், எந்தக் கட்சியையும் சாராத பெண் வாக்காளர்கள் இவர்களைவிட அதிகம். இவர்களில் படித்துக் கொண்டிருக்கும் பெண்கள், பட்டதாரிப் பெண்கள், படித்து வேலைக்குச் செல்பவர்கள், வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், வீட்டிலிருந்தே சுயதொழில் செய்பவர்கள், இல்லத் தலைவியர் எனப் பலவாறான நிலைகளில் உள்ளனர்.
இவர்களே தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்திகொண்ட ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ என அழைக்கப்படு கின்றனர். இந்த நடுநிலைப் பெண் வாக்காளர்களை மனதில்கொண்டே நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
பெண்கள் நலத் திட்டங்கள்
தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற இலவசத் திட்டங்களைத் தாண்டி, தற்போது இலவச எரிவாயு, மகளிர் உரிமைத் தொகை, கல்வி கற்கும் காலத்துக்கான உதவித்தொகை, இலவசப் பேருந்துப் பயணம், கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி போன்ற திட்டங்கள், பெண்கள் நேரடியாகப் பயன்பெறும் திட்டங்களாக (Direct Benefit Schemes) அவை செயல்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களின் அன்றாட வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெறும் விஷயங்கள், பிரச்னைகள் மீது எந்த அரசு அல்லது எந்தக் கட்சி அக்கறை செலுத்துகிறதோ, அவர்களுக்கே ஆதரவு அதிகமாகக் கிடைக்கிறது. வெற்றியும் எளிதாகி விடுகிறது.
==============