நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா உட்பட 3 மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
2023ல் சட்டம் நிறைவேற்றம்
2023ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
மூன்று மசோதாக்கள் அறிமுகம்
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டன.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா மீதான விவாதம் அன்றைய தினம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. இரண்டாவது நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்தது.
எம்பிக்கள் ஆதரவு, எதிர்ப்பு
கனிமொழி, ஆ.ராசா (திமுக), சசி தரூர், ஜோதிமணி (காங்கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐஜத), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்),
டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி), ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேமமாலினி (பாஜக) உள்ளிட்ட எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
மத்திய அமைச்சர்கள் பதில்
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
பிரதமர் மோடி வேண்டுகோள்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பை முன்னிட்டு எம்பிக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ‘மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்யப்பட்டு வந்தது.
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனபிறகும், முடிவு எடுக்கும் விஷயத்தில் மகளிருக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட தரப்படவில்லை.
உங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகியோரை நினைத்துப் பார்த்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும்.
மகளிருக்கு அதிகாரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை பறிக்காதீர்கள்.
தயவுசெய்து உரிய பரிசீலனை செய்து, முழுஉணர்வுடன் முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
அமித் ஷா விளக்கம்
மக்களவையில் மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். தொகுதி மறுசீரமைப்பின் முடிவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எத்தனை தொகுதிகள் அதிகரிக்கும் என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
மக்களவை இடங்கள் 850
மறுவரையறை மூலம் தொகுதிகள் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்படும்போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
தமிழகத்துக்கு 59 எம்பிக்கள்
‘‘தமிழகத்துக்கு தற்போது 39 எம்.பி. தொகுதிகள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும்.
இதேபோல, எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும்,
ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும்.
தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதிகரிக்கும்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும்.
2029-க்கு முன்பு வரை தற்போது இருக்கும் இடங்களின் எண்ணிக்கையிலேயே அனைத்து தேர்தல்களும் நடைபெறும்’’ என்று அமித் ஷா உறுதியளித்தார்.
மக்களவையில் வாக்கெடுப்பு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர்.
மசோதா தோல்வி
மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.
ஆனால் 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது.
வாக்கெடுப்பின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மற்ற 2 மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
=====