புதுச்சேரி நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு
ZOHO Founder Sridhar Vembu on ZOHO Office Branch Opening in Pondicherry : புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 'நம்ம புதுச்சேரி' அமைப்பு சார்பில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில், சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு பேசிய அவர், சில வித புதிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
இளைஞர்கள் தங்கள் உருவாக்க பொருளில் மதிப்பை கூட்ட வேண்டும்
இந்நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்தார். இந்த விழாவில் ஸ்ரீதர் வேம்பு இளைஞர்களுக்கு வழங்கிய மிக முக்கியமான பாடம் 'மதிப்பு கூட்டல்'. ஒரு நாடு அல்லது மாநிலம் உண்மையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், தாங்கள் செய்யும் வேலையில் அல்லது உருவாக்கும் பொருளில் எந்த அளவு மதிப்பைக் கூட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த 'மதிப்பு கூட்டல்' நுட்பத்தை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கவே ஜோஹோ நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது. புதுச்சேரி மாணவர்கள் கல்வி முடித்த பிறகு வேலைக்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் சூழலை மாற்ற வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் லட்சுமிநாராயணன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீதர் வேம்பு புதுச்சேரியில் சோஹோ கிளையைத் தொடங்கச் சம்மதித்துள்ளார். இதன் மூலம் ஐ.டி. துறையில் ஆர்வம் கொண்ட புதுவை இளைஞர்களுக்குத் தங்கள் சொந்த மண்ணிலேயே உலகத்தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகள் கதவு திறக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீதர் வேம்பு கொடுத்த அப்டேட்
இதைத்தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி ஒரு சிறிய மாநிலமாக இருப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு சாதகமான அம்சம் என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டார். சிறிய மாநிலமாக இருப்பதால், மிகக் குறுகிய காலத்திலேயே ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும். புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த 'தலைநகராக' மாறும் தகுதி கொண்டது.
இனி புதுச்சேரி இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்லும் காலம் மறைந்து, வெளிமாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வேலை தேடி புதுச்சேரிக்கு வரும் சூழலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்துள்ளார். இவரின் இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஜோஹோ நிறுவனம் புதுச்சேரியில் தடம் பதிக்கபோகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.