PCOS Uterine Cancer Risk Prevention Exercise Routine source:ai generated
லைஃப்ஸ்டைல்

Pcos மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க உடற்பயிற்சி உதவுமா? : மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை!

பிசிஓஎஸ் பாதிப்பு எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கு வழிவகுப்பது ஏன் மற்றும் உடற்பயிற்சி மூலம் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த முழுமையான விளக்கம்.

Kavitha prasanna

PCOS Uterine Cancer Risk Prevention Exercise Routine

PCOS ஹார்மோன் குறைபாடு

தற்போதைய கால கட்டத்தில் பெண்களிடையே அதிகரித்து வரும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் PCOS ஹார்மோன் குறைபாடு. மாதவிடாய் சுழற்ச்சி ஒழுங்கற்ற தன்மை, அதீத உடல் எடை, அதிகபடியாக பருக்கள் தோன்றுதல், கருத்தரித்தலில் தாமதம் என இதன் முதன்மை அறிகுறிகளே அடையாளங்களாக இருக்கின்றன.

கருப்பைச் சுவர் புற்றுநோய் ஆபத்து ஏன் ஏற்படுகிறது?

PCOS ஹார்மோன் குறைபாடு பிரச்சனை கொண்ட பெண்களுக்கு கருப்பை உள்படலம் எனப்படும் எண்டோமெட்ரியல் சார்ந்த நோய்களும் புற்றுநோய் அபாயமும் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிசிஓஎஸ் பாதிப்பால் இயல்பான அண்டவிடுப்பு (ovulation) தடையபட்டு மாதவிடாய் பல மாதங்களுக்கு வராமல் தள்ளிப்போகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை

புரோஜெஸ்ட்டிரோன் அளவை விட ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அளவுக்கு அதிகமாகும்போது, அது கருப்பையின் உள்சுவரை மேலும் தடிமனாக்குகிறது. இந்தத் தொடர்ச்சியான மாற்றமே நாளடைவில் எண்டோமெட்ரியல் புற்றுநோயாக மாற வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இணையும் போது இந்த ஆபத்தின் வீரியம் மேலும் அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி உதவுமா?

உடற்பயிற்சி செய்வது மட்டுமே பிசிஓஎஸ் பிரச்சனையை முற்றிலுமாகப் போக்கிவிடாது என்றாலும், அதனால் ஏற்படும் கடுமையான விளைவுகளைத் தவிர்க்க பெருமளவு துணைபுரிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடர் பயிற்சிகள் மூலம் உடலின் இன்சுலின் உணர்திறன் சீராகி, திடீர் எடையதிகரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தை உருவாக்கும் கார்டிசோல் ஹார்மோனின் அளவு குறைந்து மனநிலை சீராகிறது.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி வழிகாட்டுதல்கள்

வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் சுமார் 2.5 மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குவது உடலுக்கு உகந்தது. வாரத்தில் 5 நாட்கள், தினமும் 30 நிமிடங்கள் எனப் பிரித்து செய்யலாம். உடற்பயிற்சியைப் புதிதாகத் தொடங்குபவர்கள் 10 முதல் 15 நிமிடங்களில் தொடங்கி படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம்.

மிதமான உடற்பயிற்சிகள்

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி, நடனம் மற்றும் ஜாக்கிங் ஆகியவை நல்ல பலன்களை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீவிரப் பயிற்சிகள்

மேலும் கார்டியோ மற்றும் எச்.ஐ.ஐ.டி (HIIT) போன்ற தீவிரப் பயிற்சிகள் இன்சுலின் அளவைச் சீராக்கி, நீரிழிவு நோய் தாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்கின்றனர். அதுமட்டுமின்றி முறையான உடற்பயிற்சியோடு சமச்சீரான சத்தான உணவுகளையும் உட்கொள்வது மிக அவசியமாகும்.

முக்கியமாக உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள் உட்கொள்வது, பயிற்சிகள் என நீங்கள் எதைத் தொடங்க நினைத்தாலும் அந்தந்த துறைக்கான வல்லுநர்கள், மருத்துவர்களிடம் பரிசீலனை செய்து, அதன் பின் தொடர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

==============