இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதுதான் பலருடைய கனவாக உள்ளது. ஆனால் அனைவராலும் உடல் எடையை முழுமையாக குறைக்க முடிவதில்லை. காரணம் அவர்களால் உணவு உண்ணும் முறையை கட்டுப்படுத்த முடிவதில்லை.
உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் பின்வரும் உணவுகளை நொறுக்குத் தீனியாக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல் இடத்தில் இருப்பது இட்லி. இட்லியை நொறுக்குத் தீனியாக எடுத்துக் கொள்ளும் போது அது சிற்றுண்டியாகவும் மாறிவிடுகிறது. ஒரு துண்டு இட்லியில் 39-40 கலோரிகள் மட்டுமே இருப்பதால் நீங்கள் தாராளமாக இட்லியை உண்ணலாம். மினி இட்லி,மசாலா இட்லி,பொடி இட்லி,புதினா இட்லி என வகைவகையாக சாப்பிடலாம். மிகவும் ஆரோக்கியமானதும் கூட
அடுத்ததாக சென்னா (கொண்டை கடலை) வேகவைத்த கொண்டைக் கடலையில் சிறிதளவு வெங்காயம்,தக்காளி உங்களுக்கு மிகவும் பிடித்தமான காய்கறிகள், தேவைக்கேற்ப எலுமிச்சைப் பழச் சாறு முதலானவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். 100 கலோரிக்கு குறைவான அளவு உள்ளதால் உடல் எடை அதிகரிக்காது. சென்னா வேகவைத்த தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சி,பூண்டு,சிறிதளவு மிளகு சீரகத் தூள்,கொத்தமல்லி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து புதினா இலை தூவி சென்னா சூப்பாகவும் குடிக்கலாம்.சுவையாக இருக்கும்.
அடுத்ததாக முளைகட்டிய பயிர்களை அதிகமாக உட்கொள்ளலாம். நொறுக்குத் தீனி சாப்பிடும் எண்ணத்தைப் பெறுவதற்கு முளைகட்டிய பயிர்களுடன் உங்களுக்கு மிகவும் பிடித்தமான மசாலாக்களை தேவையான அளவு சேர்த்து கூடுதலாக வெங்காயம், தக்காளி,எலுமிச்சைப் பழச்சாறு முதலானவற்றை கலந்து உங்கள் நாவின் சுவைக்கேற்ப காரசாரமாக உண்ணலாம்.
மாலைநேரத்தில் வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி சாலட் போல எடுத்துக் கொள்ளலாம். இயற்கையிலேயே குறைந்த அளவு கலோரிகளையும்,அதிகளவு தண்ணீர் சத்தையும் கொண்டுள்ளதால் ஒரு சாலட் சாப்பிட்ட உணர்வையும் கொடுத்து உடல் எடை குறைக்கும் முயற்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இருப்பினும் உடல் எடை குறைப்பில் ஈடுபட விரும்புவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.