உலக பருப்பு தினம் 2026
World Pulses Day 2026 Types Of Lentils Most Protein List in Tamil : உலக பருப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பருப்பிற்காக உலக தினமா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள், அத்தியாவசிய நன்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை பிப்.10 ஆம் தேதியை உலக பருப்பு தினம் என அறிவித்தது.
2019 முதல்
பருப்பு வகைகள் உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு எதிராக போராடுவதால் ஐநா அமைப்பால் இந்த தினமானது 2019 ஆம் ஆண்டுமுதல் உலக பருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சரி, உலக பருப்பு தினமான இன்று எந்தெந்த பருப்பு வகைகளில் புரதச் சத்துகள் அதிகமாக உள்ளது என பார்க்கலாம்.
புரதத்தின் தேவை
ஆரோக்கியமான பெரியவர்களுக்கு உடல் எடையில் கிலோவிற்கு 0.8 கிராம் முதல் 1 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலை, ஆரோக்கியம் முதலானவற்றை பொருத்து இந்த விகிதமானது மாறுபடும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், கோழி இறைச்சியிலிருந்து புரதத்தை பெற்றுக்கொள்கின்றனர். சைவ உணவை விரும்புபவர்கள் பருப்பு வகைகள், சோயா, பால் பொருட்களில் இருந்து பெறுகின்றனர்.
பருப்பு வகைகளும், புரதமும்
துவரம் பருப்பு
பெரும்பான்மையாக நாம் அதிகம் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்று. நம் அன்றாட உணவில் மிக எளிமையாக நமக்கு புரதத்தை வழங்குவது துவரம் பருப்பு. 100 கிராமிற்கு 22.86 கிராம் புரதத்தை கொண்டுள்ளது.
புரதம் மட்டுமின்றி மெக்னீசியம், ஃபோலிக் ஆசிட், கால்சியம் ,பொட்டாசியம் முதலானவை நிறைந்திருப்பதால் தசை வளர்ச்சி, செரிமானம், இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் 100 கிராமிற்கு 24 கிராம் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. பாசிப்பருப்பு தசைகளை வலிமையாக்கவும், உடல் திசுக்களை பழுது பார்க்கவும் உதவுகிறது.
அதனால் இது ’ஏழைகளின் இறைச்சி’ என்று அழைக்கப்படுகிறது. இதை உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கான சிறந்த தேர்வு என்றும் சொல்லலாம்.
மசூர் பருப்பு/ சிவப்பு பருப்பு
மசூர் பருப்பில் 100 கிராமிற்கு 26 கிராம் புரதம் உள்ளது. விரைவாக வேகும் தன்மை கொண்டது. அதனால் சமைப்பதற்கு எளிமையானது.
கர்ப்பிணிகளுக்கு தேவையான ஃபோலேட் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியத்தைம் மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.
சோயா பீன்ஸ்
பருப்பு வகைகளிலேயே அதிக புரதத் தன்மையைக் கொண்டுள்ளது. 100 கிராமிற்கு 36 முதல் 40 கிராம் வரை புரத சத்தைக் கொண்டுள்ளது.
EUFIC கூற்றுப்படி சமைத்த சோயாபீன்களில் 100 கிராமிற்கு 10.6 கிராம் புரதம் உள்ளதாக கூறுகிறது.
அப்படியெனில் ஒரு கப் சமைத்த சோயாவில் 28 கிராம் புரதம் உள்ளதாம். இது கோழி இறைச்சியின் மார்பு பகுதி இறைச்சிக்கும், மூன்று முட்டைகளுக்கும் சமமாம்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை அதிக புரத சத்தையும், அதே சமயம் குறைந்த கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது. உலர்ந்த எடையில் 100 கிராமிற்கு 19 கிராம் புரதத்தையும், சமைத்த உணவில் 100 கிராமிற்கு 8.3 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளது.
உலக அளவிலும் பெரும்மக்களால் கொண்டைக்கடலை விரும்பப்படுகிறது. கொண்டைக்கடலை அனைத்து உணவு வகைகளுக்கும் ஏற்றது.
வேக வைத்து , வேக வைக்காமல், சாலட்டுடன் என அனைத்து வகையான உணவுடனும் சேர்த்து சாப்பிட முடியும் என்பதால் அனைத்து மக்களுக்கும் விருப்பமானதாகவும் உள்ளது.