இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு இடையே, மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக புதிய நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7 நிமிடங்களில் புற்றுநோய்க்கு சிகிச்சை
'ரோச் ஃபார்மா இந்தியா' (Roche Pharma India) நிறுவனம் தயாரித்துள்ள 'டெசென்ட்ரிக்' (Tecentriq - atezolizumab) என்ற இம்யூனோதெரபி மருந்தின் புதிய சப்ஸ்குடேனியஸ் (Subcutaneous) என்ற தோலடி ஊசி வடிவம் இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கால விரயம் மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பு சுமை குறையும்
இதுவரை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நரம்பு வழியாக (Intravenous - IV) பல மணி நேரம் குளுக்கோஸ் மூலம் செலுத்தப்பட்டு வந்த இந்த மருந்து, இனி வெறும் 7 நிமிடங்களில் தோலடி ஊசி மூலம் அதாவது தொடை பகுதியில சாதாரண ஊசி மூலம் எளிதாகச் செலுத்தப்படும்.
சிகிச்சைக்காக செலவிடும் நேரம் குறைவு
இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செலவிடும் நேரம் சுமார் 80 சதவீதம் வரை குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய 7 நிமிட தோலடி ஊசி முறை
வழக்கமான நரம்பு வழி சிகிச்சையின் போது, மருத்துவமனைகளில் உள்ள பிரத்யேக சிகிச்சை நாற்காலிகள் நீண்ட நேரம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த புதிய 7 நிமிட தோலடி ஊசி முறையின் மூலம், முன்பு ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தேவைப்பட்ட அதே நேரத்தில், தற்போது ஐந்து நோயாளிகள் வரை எளிதாக சிகிச்சை பெற முடியும்.
இதனால் பெரிய மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மீதான சுமை குறைவதோடு, தினசரி பராமரிப்பு மையங்கள் (Daycare Oncology Centres) மூலமாகவும் இந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு எளிதாக வழங்க வழிவகை ஏற்படும்.
உலகளாவிய அங்கீகாரம் மற்றும் நோயாளிகளின் விருப்பம்
இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) இந்த மருந்தை குறிப்பிட்ட வகையான நுரையீரல் புற்றுநோய் (NSCLC) சிகிச்சைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
85க்கும் மேற்பட்ட நாடுகளில் சிகிச்சை
சர்வதேச அளவில் ஏற்கனவே 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சையை, உலகளவில் 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெற்றிகரமாகப் பெற்றுள்ளனர்.
நோயாளிகளுக்கு கூடுதல் உடல்நல வசதி
மருத்துவ ஆய்வுகளின்படி, ஐந்து நோயாளிகளில் நான்கு பேர் நரம்பு வழி சிகிச்சையை விட இந்த அதிவேக தோலடி ஊசி முறையையே அதிகம் விரும்புகின்றனர். இது நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, அவர்களுக்கு கூடுதல் உடல்நல வசதியையும் அளிக்கிறது.
ஒரு குப்பியின் விலை
இந்திய சந்தையில் இந்த மருந்தின் ஒரு குப்பியின் (Vial) விலை சுமார் ரூ.3.7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கண்டுபிடிப்பு இந்திய புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகலை மேலும் எளிமையாக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
=====