From Aadhaar to Passports: Key financial changes coming into effect today—will they impact the budget? Ai generated
சிறப்புச் செய்திகள்

ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை : இன்று முதல் அமலுக்கு வந்த முக்கிய நிதி மாற்றங்கள் : பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நிதி விதிகள்! வருமான வரி தாக்கல், ஆதார் கட்டணச் சலுகை, பாஸ்போர்ட் கட்டண உயர்வு மற்றும் SBI, HDFC கிரெடிட் கார்டு மாற்றங்கள் குறித்த முழு விவரம்.

Kavitha prasanna

நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் நிதி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகளும் மாற்றங்களும் அமலுக்கு வருகின்றன.

மாதாந்திர பட்ஜெட்டில் பாதிப்பு?

இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு பயனர்கள் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் எனப் பல தரப்பினரின் மாதாந்திர பட்ஜெட்டிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதன் முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1.ஆதார் அட்டை மின்னஞ்சல் புதுப்பிப்பு

இந்திய தனி அடையாள ஆணையம் ,பயனர்களுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை புதுப்பிப்பதற்காக இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 75 கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆறுமாத காலம் அவகாசம்

இச்சேவை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். பயனர்கள் ஆதார் மொபைல் செயலி மூலம் இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. வருமான வரி தாக்கல்

2025-26 நிதியாண்டிற்கான ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி அவகாசம் வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

கட்டுப்பாடுகளால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல்?

இந்த காலக்கெடுவிற்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், அபராதம் விதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட வரி விதிப்பு முறைகளைத் தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் மற்றும் நஷ்டங்களை சந்திக்கும் சூழல் உருவாகலாம்.

3. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ஓய்வறை அணுகல்

எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளை இலவசமாகப் பயன்படுத்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ரூ. 60,000 செலவு செய்திருந்தால் மட்டுமே, அடுத்த காலாண்டில் 3 முறை இலவச ஓய்வறையை பயன்பாட்டைப் பெற முடியும்.

உதாரணமாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஓய்வறை வசதியைப் பெற, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் ரூ. 60,000 செலவிட்டிருக்க வேண்டும்.

4. பாஸ்போர்ட் கட்டண உயர்வு

சாதாரண மற்றும் தட்கல் முறைகளில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இதன்படி, பாஸ்போர்ட் பெறுவதற்கான செலவு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வழக்கமான மாதத்தின் முதல் நாள் மாற்றங்களின்படி, வணிக மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்

எஸ்பிஐ கார்டு நிறுவனம் தனது குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்ட் பாயிண்ட்ஸ் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய திருத்தங்கள் 'PhonePe SBI கிரெடிட் கார்டு பர்பிள்' மற்றும் 'PhonePe SBI கிரெடிட் கார்டு செலக்ட் பிளாக்' ஆகிய இரண்டு அட்டைதாரர்களையும் பாதிக்கும்.

ரிவார்டு பாயிண்டில் புதிய வரம்புகள்

இனி ரிவார்ட் பாயிண்ட்ஸ் பெறுவதற்கான புதிய வரம்புகளும், ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்காத பரிவர்த்தனைகளின் பட்டியலும் நடைமுறைக்கு வருகின்றன.

=====