சிறப்புச் செய்திகள்

கர்ப்பம் என்று தெரிந்த 1 மணி நேரத்தில் குழந்தை பிறந்த அதிசயம்

கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள அதிசயம் சீனாவில் நடந்துள்ளது.

S Kavitha

மத்திய சீனாவைச் சேர்ந்த லீ என்ற குடும்பப் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் அலுவலகத்தில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு வயிறு வலி ஏற்பட்டதால் தனது மின் மோட்டார் வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். மருத்துவர்கள் கூறிய 1 மணி நேரத்தில் அந்த பெண்மணி ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

2 மணி அளவில் அந்த பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் 3.30 மணியளவில் ஆபரேஷன் ஏதும் இன்றி இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி அந்த பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் போனது என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்ததாகவும் உடல் எடை கூடும்போது கூட மாதவிடாய் பிரச்சனை காரணமாகத் தான் உடல் எடை கூடுவதாக நினைத்துக்கொண்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கணவன் மனைவி இருவரும் அடுத்த குழந்தை வேண்டாம் என்ற முடிவில் கருத்தடை முறைகளில் மிகவும் கவனமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே மின் மோட்டார் வாகனத்தை அதிகமாக பயன்படுத்தியதாகவும் நல்ல வேளை குழந்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமாக பிறந்துள்ளதாகவும் அப்பெண் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு கருவுற்றிருப்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுப்பது சீனாவில் முதல் முறை கிடையாது. ஏனென்றால் இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வெளியாகி பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.