யார் இந்த ஹோ குன்ஃபெய்?
இன்று நாம் பயன்படுத்தும் நவீன ஸ்மார்ட்போன்களின் தொடுதிரை (Touchscreen) தொழில்நுட்பத்திற்குப் பின்னால் ஒரு பெண்ணின் அசாத்திய உழைப்பும், கண்ணீர் கலந்த வரலாறும் மறைந்துள்ளது. அவர்தான் சீனாவின் 'லென்ஸ் டெக்னாலஜி' (Lens Technology) நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஹோ குன்ஃபெய் (Zhou Qunfei).
முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்த ’ஷோ’
ஆப்பிள், சாம்சங், ஹுவாவே மற்றும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் வரை உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் டிஸ்ப்ளே கண்ணாடிகள் இவருடைய நிறுவனத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.
Self-made' பெண் கோடீஸ்வரர்களில் ஒருவர்
2026-ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் (Forbes) இதழின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, உலகின் மிக உயர்ந்த 'Self-made' பெண் கோடீஸ்வரர்களில் ஒருவரான இவரின் சொத்து மதிப்பு சுமார் 15.6 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
வறுமையில் தொடங்கிய ஆரம்பகால வாழ்க்கை
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு ஏழைக் கிராமத்தில் 1970-ல் பிறந்த ஹோ குன்ஃபெய், சிறு வயதிலேயே தாயை இழந்தார்; தந்தையின் பார்வையும் குறைபாடுடையதாக இருந்தது. வறுமையின் காரணமாகத் தனது 16 வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதிய நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அயராத உழைப்பும் உத்வேகமும்
பின்னர் ஷென்சென் நகருக்குக் குடிபெயர்ந்து, ஒரு கடிகாரக் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் சாதாரணத் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார். அங்குப் பகலில் வேலை செய்துகொண்டே, இரவில் கணக்கியல் மற்றும் வடிவமைப்பு வகுப்புகளுக்குச் சென்று தனது திறன்களை வளர்த்துக் கொண்டார்.
தொழிலதிபராய் மாறிய திருப்புமுனை
மத்தவர்களிடம் வேலை பார்ப்பதைத் தவிர்த்து சொந்தமாக சாதிக்க விரும்பிய ஹோ, 1993-ஆம் ஆண்டு தான் சிறுகச் சிறுகச் சேமித்த 2,500 அமெரிக்க டாலர் முதலீட்டில் ஒரு சிறிய ஒர்க்ஷாப்பைத் தொடங்கினார்.
பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த இவருக்கு, 2003-ல் மோட்டோரோலா நிறுவனத்தின் 'Razr V3' மாடலுக்காக வலிமையான கண்ணாடி திரையைத் தயாரிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சப்ளையர்
அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததைத் தொடர்ந்து, 2007-ல் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோனுக்கான அதிகாரப்பூர்வ சப்ளையராக லென்ஸ் டெக்னாலஜியைத் தேர்ந்தெடுத்தது. இங்கிருந்து இவருடைய வர்த்தகம் உலக அளவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
நிறுவனத்தின் அசுர வளர்ச்சியும் நிர்வாகமும்
2015-ல் ஷென்சென் பங்குச்சந்தையிலும், தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில் ஹாங்காங் பங்குச்சந்தையிலிருந்தும் (Hong Kong Stock Exchange) லென்ஸ் டெக்னாலஜி பிரம்மாண்டமாகப் பட்டியலிடப்பட்டது.
1,30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
2024-ஆம் ஆண்டு கணக்குப்படி, 1,30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் 7.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆண்டு வருவாயை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது.
ஆசியாவின் மிக சக்திவாய்ந்த பெண்கள்
இவ்வளவு பெரிய உயரத்தை எட்டினாலும், ஹோ குன்ஃபெய் நேரடியாகத் தொழிற்சாலைக்கே வந்து உற்பத்தித் தரத்தைத் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கும் நிர்வாகப் பாணியைக் கொண்டுள்ளார். இதனால் ஃபார்ச்சூன் இதழின் 'ஆசியாவின் மிக சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலிலும் இவர் அடிக்கடி இடம்பெற்றுள்ளார்.
தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி (AR) மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கண்ணாடி தொழில்நுட்பங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வரும் ஹோ குன்ஃபெய், தனது சொந்த கிராமப்புறப் பெண்களின் தொழில்நுட்பக் கல்விக்காகவும் பெருமளவில் உதவி செய்து பலருக்கும் பெரும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
=====