‘Zero Salary’ Despite Earning $10 Billion in Profits: Mukesh Ambani Has Taken No Salary for Six Years source:google
சிறப்புச் செய்திகள்

10 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியும் ‘Zero Salary’ : 6 ஆண்டுகளாக சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி, பின்னணி என்ன?

இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் ரிலையன்ஸ் நிறுவனம் ₹95,754 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.இருப்பினும், முகேஷ் அம்பானி தொடர்ந்து 6-வது ஆண்டாக 'Zero Salary' கொள்கையைக் கடைப்பிடிப்பது ஏன்?பின்னணி இதோ!

Kavitha prasanna

‘Zero Salary’ Despite Earning $10 Billion in Profits: Mukesh Ambani Has Taken No Salary for Six Years

இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே எந்தவொரு நிறுவனமும் செய்யாத அசுர சாதனையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் படைத்துள்ளது.

10 பில்லியன் டாலர் லாபம்

ஒரே நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் வருடாந்திர நிகர லாபத்தைக் கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய சரித்திரத்தை ரிலையன்ஸ் எட்டியுள்ளது. ஆனால், நிறுவனம் இந்த அளவிற்குப் பிரம்மாண்ட லாப உச்சத்தில் இருந்தும், அதன் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 6-வது ஆண்டாக ஒரு ரூபாய் கூடச் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகிறார்.

கம்பெனி இவ்வளவு பெரிய லாபத்தில் இயங்கியும் அவர் ஏன் சம்பளம் வாங்குவதில்லை? அவரது வருமானம் எப்படி வருகிறது? என்று விரிவாகப் பார்ப்போம்.

கொரோனா காலத்தில் எடுத்த அதிரடி முடிவு!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலகையும் முடக்கிய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடுமையான தேக்கநிலையைச் சந்தித்தது.

தொழில்துறையின் இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முகேஷ் அம்பானி தனது வருடாந்திர சம்பளம், கமிஷன் மற்றும் இதர படிகள் அனைத்தையும் முழுமையாக விட்டுக் கொடுப்பதாக அதிரடியாக முடிவெடுத்தார்.

தற்போது 2026 நிதியாண்டு முடிவில், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.95,754 கோடி (10 பில்லியன் டாலர்) நிகர லாபத்தையெட்டி புதிய சாதனை படைத்திருந்தாலும், 2020-ல் தான் எடுத்த அந்த 'பூஜ்ஜிய சம்பளம்' அதாவது Zero Salary என்ற கொள்கை முடிவை இந்த ஆண்டும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

கோவிட் காலத்திற்கு முன்பே முகேஷ் அம்பானி எடுத்த முடிவு

"அவர்தான் நிறுவனத்தின் முதலாளி, அவருக்கு எதற்கு சம்பளம்?" என்று பலரும் நினைக்கலாம். ஆனால், கார்ப்பரேட் விதிமுறைகளின்படி நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சம்பளம் மற்றும் கமிஷன் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவிட் காலத்திற்கு முன்பே முகேஷ் அம்பானி சம்பள விஷயத்தில் மிகவும் வித்தியாசமாகவே செயல்பட்டு வந்துள்ளார்.

ரூ.15 கோடி சம்பளம் நிர்ணயம்

கடந்த 2009-ஆம் நிதியாண்டு முதல் 2020 வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் பல மடங்கு உயர்ந்த போதும், முகேஷ் அம்பானி தனது வருடாந்திர ஊதியத்தை ரூ.15 கோடியாக அவராகவே நிர்ணயம் செய்து கொண்டார்.

தொடர்ந்து 12 ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட கூட்டாமல் அதே அளவிலேயே தனது சம்பளத்தை அவர் பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் வாங்கவில்லை என்றால் வருமானம் எப்படி வருகிறது?

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மாதச் சம்பளமோ அல்லது இதர சலுகைகளோ பெறுவதில்லை என்றாலும், அவரது முதன்மை வருவாய் வேறு வழியில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகள் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

எனவே, நிறுவனம் ஈட்டும் லாபத்திற்கு ஏற்ப தங்களது பங்குதாரர்களுக்கு வழங்கும் லாபப் பங்கு (Dividends) மூலம் மட்டுமே அவருக்கு வருமானம் கிடைக்கிறது.

₹4,000 கோடி டிவிடெண்ட் வருவாய்

இந்த 2026 நிதியாண்டில், ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.6 லாபப் பங்கு வழங்குவதாகப் பரிந்துரைத்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு இந்த ஒரே ஒரு நிதியாண்டுல் மட்டும் ரூ.4,000 கோடிக்கும் மேல் டிவிடெண்ட் வருவாயாகக் கிடைக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாபத்தை மட்டுமே நம்பி, ஒரு முதலாளியாக தனது வருவாயை பங்குகளின் லாபத்தின் மூலம் மட்டுமே முகேஷ் அம்பானி ஈட்டி வருகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

======