சபரிமலை ஐயப்பன் கோவில்
18 steps in Sabarimala, called the Pathinettupadi, symbolize spiritual progression by representing Gods and Planets : சபரிமலை ஐயப்பன் கோவில் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கருப்பு உடை, விரதம், இருமுடி கட்டு, 18 படிகள் தான்.
18 எண்ணின் சிறப்பு
18 என்பதற்கும் இந்து சமயத்திற்கும் முக்கிய தொடர்பு உண்டு. மகாபாரதத்தில், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது.
பழம்பெருமை கொண்ட நம் அருந்தமிழிலும் பதினெட்டுக்கு முக்கிய இடம் உண்டு. பதினெண் மேற்கணக்கு நூல்களென்றும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களென்றும் வகுத்து வைத்தார்கள், முன்னோர்கள்.
சபரிமலை பதினெட்டு படிகள்
அதுபோல, கார்த்திகை மாதம் என்றாலே, ‘சபரிமலை காலம்’ என்று அழைக்கும் அளவுக்கு, சபரிமலை ஐயப்பன் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார்.
48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பதினெட்டுப் படிகளில் தங்கள் பாதங்களை பதிப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள். எனவேதான் ஆண்டிற்காண்டு பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது, பெண்டிரும் ஐயனைத் தரிசித்து ஆனந்தம் அடைகிறார்கள். பக்தர்கள் வரும் பல லட்சங்களை தொடுகிறது.
18 படிகள் - மகத்துவம் என்ன?
பதினெட்டுப் படிகளின் தாத்பர்யத்தை ஆராய்ந்தால் மெய் சிலிர்க்கிறது. ஆன்மிகம், ஆண்டவன், கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை! அந்த நம்பிக்கையை அசைக்க முடியாத உறுதியானதாக ஆண்டவன் நமக்கு வழங்குகிறார்.
ஒன்பது கடவுள், ஒன்பது கோள்கள்
சபரிமலையில் பதினெட்டுப் படிகளில் பாதி ஒன்பதைக் கடவுளர்களுக்கும், மீதி ஒன்பதைக் கிரகங்களுக்கும் ஒதுக்கி, ஆன்மிகத்தின் ஆணி வேரை நிலைநாட்டி வைத்திருக்கிறார்கள். அதன்படி, ஒற்றைப்படை எண் கொண்ட படிகளில் நவக்கிரகங்களும் இரட்டைப்படை வரிசை கொண்ட படிகளில் கடவுளர்களும் வீற்று அருள்பாலிப்பதாக ஐதீகம்.
18 படிகளின் ஐதீகம்
1.சூரியன் 2.சிவன்
3.சந்திரன் 4.பராசக்தி
5.செவ்வாய் 6.முருகன்
7.புதன் 8.விஷ்ணு
9.குரு 10.பிரம்மா
11.சுக்கிரன் 12.லட்சுமி
13.சனி 14.மனு
15.ராகு 16.சரஸ்வதி
17.கேது 18.விநாயகர்
ஒன்பது கோள்களையும், ஒன்பது கடவுளர்களையும் வணங்கி, உள்ளே இருக்கும் ஐயப்பனையும் பக்தி சிரத்தையுடன் தொழும்போது, வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. இறைபக்தி நற்சிந்தனையை மேலோங்கச் செய்து, வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.
“பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்…
ஐயனைநாம் காணலாம்!
அவனருளினில் நாம் திளைக்கலாம்!”
======================