310 ஆண்டுகளாக லட்டு விற்பனை
13.52 crore Tirumala laddus sold in 2025, says TTD : திருப்பதியில் ஏழுமலையானுக்கு லட்டு பிரசாதம் படைக்கப்படும் சம்பிரதாயம் தொடங்கி, 310 ஆண்டுகள் கடந்து விட்டது. திருப்பதி ஏழுமலையானை போலவே அவருக்கு படைக்கப்படும் ”லட்டும்” உலகப் புகழ் பெற்றது.
‘லட்டு’ என்றால் திருப்பதி தான்
இனிப்பு பண்டங்களில் ஒன்றான ‘லட்டு’ என்று சொன்னாலே முதலில் நினைவிற்கு வருவது திருமலை திருப்பதி பெருமாள்தான். திருப்பதி பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான ஸ்ரீவாரி லட்டுவிற்கு(Srivari Laddu) இணையான சுவையுள்ள லட்டு உலகில் வேறு எங்கும் கிடையாது என்பது தான் உண்மை.
பக்தர்களுக்கு லட்டு விற்பனை
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது போக்குவரத்து வசதி ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் லட்டு பிரசாதமாக படைக்கப்பட்டு வருகிறது.
1803ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்யும் பணியானது தொடங்கப்பட்டு இன்றுவரை பெருமாளின் பிரசாதமாக லட்டு இருக்கிறது. திருப்பதி லட்டுக்கு 2008ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது.
திருமலையில் லட்டு தயாரிப்பு
போக்குவரத்து வசதிகள் அதிகரித்து, திருப்பதிக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து விட்டது. எனவே, அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில், நவீன முறையில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பு மடப்பள்ளியில் கையால் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
2025 - லட்டு விற்பனையில் சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பிரதான விருப்பமான ‘லட்டு’ பிரசாத விற்பனை, 2025ம் ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. லட்டு தயாரிப்பு வரலாற்றிலேயே 2025-ம் ஆண்டு ஒரு "மறக்க முடியாத சாதனை ஆண்டு" எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
13.5 கோடி லட்டுகள் விற்பனை
இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2024-ம் ஆண்டில் 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 13 கோடியே 52 லட்சமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 1.37 கோடி லட்டுகள் அதிகம். 2024 ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீத வளர்ச்சியாகும்.
ஒரே நாளில் 5.13 லட்சம் லட்டுகள்
2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மற்றுமொரு பிரம்மாண்ட சாதனை நிகழ்த்தப்பட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான லட்டுகள் விற்பனையாவது இதுவே முதல்முறை
24 மணி நேரமும் லட்டு தயாரிப்பு
லட்டு தயாரிப்பிற்காக திருமலையில் உள்ள ‘பொட்டு’ எனப்படும் பிரம்மாண்ட சமையலறையில், சுமார் 700 வைணவ பிராமணர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இரண்டு ஷிப்ட்டுகளாகப் பிரிந்து, 24 மணி நேரமும் புனிதமான விதிமுறைகளைப் பின்பற்றி லட்டுகளைத் தயாரித்து வருகின்றனர்.
விழா நாட்களில் 10 லட்சம் லட்டுகள்
சாதாரண நாட்களில் தினமும் 4 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும் நிலையில், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கியத் திருவிழா நாட்களில் பக்தர்களின் தேவைக்காக 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை லட்டுகள் கூடுதலாகத் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகின்றன.
=================