சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்
Lord Shiva Annabhishekam 2025 Date in Tamil Month Aippasi : மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்கு ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்படும். அதிலும் சிறப்பு மிகுந்த ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகத்தை ஒருமுறை தரிசித்தால், கோடி முறை சிவ தரிசனம் செய்து வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஐப்பசி பவுர்ணமி விழா
ஐப்பசி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்று அனைத்து சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம்(Aippasi Pournami Annabhishekam 2025) ஆகும். ஒவ்வொரு மாத பெளர்ணமியும் சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது என்றாலும், ஐப்பசி மாத பெளர்ணமி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அன்றைய தினம் சுத்த அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷம்.
பச்சரிசியில் சிவனுக்கு அபிஷேகம்
சுத்தமான பச்சரிசியை குழைவாக வடித்து, அதை நன்கு ஆற வைத்து, பிறகு அந்த அன்னத்தை கொண்டு, சிவ பெருமானின் லிங்க திருமேனியை போர்த்தி விடுவார்கள். அன்னத்தோடு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
ஐப்பசி மகா அபிஷேகம்
ஐப்பசி மாத பெளர்ணமியில் நடைபெறும் இந்த அபிஷேகத்திற்கு மகா அன்னாபிஷேகம்(Maha Annabhishekam in Aippasi Month) என்று பெயர். காரணம் என்னவென்றால், அன்னாபிஷேகம் அன்று சிவ பெருமானுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னத்திலும் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால் ஒரு அன்னாபிஷேகம் தரிசனம் கண்டால், கோடி சிவ லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணியம் கிடைக்கும். அதோடு அவரின் தலைமுறைக்கே உணவு பற்றாக்குறை என்பதே ஏற்படாது.
அபிஷேக பிரியரான சிவபெருமான்
சிவ பெருமானுக்கு தினமும் பலவிதமான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை சில குறிப்பிட்ட பொருட்களால் செய்யப்படும் அபிஷேகங்கள் மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரமான திங்கட்கிழமைகளில் செய்யப்படும் சங்காபிஷேகம் எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதே போல் ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது சிறப்புக்குரியதாகும்.
உயிர்களுக்கு படியளந்த ஈசன்
எம்பெருமான் ஈசன் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளந்த தினம் தான் ஐப்பசி பவுர்ணமி என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இறைவன் அனைத்து பொருளிலும் பரபிரம்மமாக நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
நவம்பர் 5ம் தேதி அன்னாபிஷேகம்
இந்த ஆண்டு ஐப்பசி மகா அன்னாபிஷேகம் நவம்பர் 05ம் தேதி, அதாவது(Annabhishekam 2025 Date in Tamil) அடுத்த வாரம் புதன்கிழமை வருகிறது. நவம்பர் 04ம் தேதி இரவு 09.43 மணிக்கு பவுர்ணமி திதி துவங்கி, நவம்பர் 05ம் தேதி இரவு 07.27 வரை நீடிக்கிறது. அன்றைய தினம் காலை 10.14 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் அமைந்துள்ளது.
பரணி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம்
பெரும்பாலும் அன்னாபிஷேகம் என்பது அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை நேரத்தில் நடைபெறும். ஆனால் சில கோவில்களில் அந்த கோவிலின் பஞ்சாங்க விதிகளின் படி காலையில் நடத்தப்படுவது உண்டு. இந்த ஆண்டு பரணி நட்சத்திரம் வரும் நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க : முருகனின் சூரசம்ஹாரம்: மகாபாரதம், கந்தபுராணம் சொல்லும் கதைகள்
சுக்கிரன் அருளால் சுபிட்சம்
பரணி நட்சத்திரத்திற்குரிய அதிபதி சுக்கிரன். அவரது ஆதிக்கம் நிறைந்த நாளில் சிவ பெருமானின் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, சுகமான வாழ்க்கை அமையும். சொர்க்கமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே, ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும் மிகப் பெரிய புண்ணியம் பக்தர்களுக்கு வந்து சேரும்.
=============