கோவில்களில் தமிழ் புத்தாண்டு
சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி ( செல்வாய்க்கிழமை ) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் சிறப்பு வழிபாடுகள் இருக்கும். பொதுமக்கள் திரண்டு சென்று வழிபாடு நடத்துவர்.
தனித்துவம் வாய்ந்த ஆலயங்கள்
அதேசமயம், சில கோவில்கள் தங்களின் தனித்துவமான மரபுகள் மற்றும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கு புகழ் பெற்றவையாக இருக்கின்றன. அந்த கோவில்கள் பற்றி பார்ப்போம்.. :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதன்படி, சித்திரை முதல் நாள் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் வைரக் கிரீடம் மற்றும் தங்கப் பாவாடை அணிவித்துச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும்.
தமிழ் புத்தாண்டை ஓட்டி உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவும் தொடங்குவதால், நகர்மே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
திருவண்ணாமலையில் புத்தாண்டு அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதிகாலையிலேயே அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி வந்து தங்களின் புதிய ஆண்டை சிறப்பாக தொடங்குவார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தமிழ் புத்தாண்டு அன்று கடல் அலைபோல பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி முருகனைத் தரிசிப்பதை பாக்கியமாக கருதுகின்றனர். எனவே, அன்றைய தினம் திருச்செந்தூர் நகரமே மக்கள் அலையில் தத்தளிக்கும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
முருகனின் மூன்றாம் படைவீடான பழனியில் தமிழ் புத்தாண்டு அன்று 'கனி காணுதல்' வழிபாடு சிறப்பாக நடைபெறும். மூலவருக்கு முன் தங்கம், வெள்ளி நாணயங்கள், நவமணிகள் மற்றும் பல்வேறு கனிகளை (பழங்கள்) குவித்து வைத்து 'கனி காணுதல்' வைபவம் நடைபெறும். மக்கள் மலையேறிச் சென்று முருகன் தரிசித்து, அவரது அருளைப் பெற்று ஆண்டைத் தொடங்குவர்.
சென்னை வடபழனி முருகன் கோவில்
தலைநகர் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான ஆன்மிகத் தலங்களில் இதுவும் ஒன்று. சித்திரை முதல்நாள் அன்று வடபழனி முருகனுக்குச் சிறப்புச் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் தங்கக்கவச அலங்காரங்கள் செய்யப்படும். சென்னை வாழ் மக்கள் தங்களின் ஆண்டின் முதல் வழிபாட்டை இங்கு தொடங்குவதாக பாக்கியமாக கருதுகிறார்கள்.
கோவில்களில் பஞ்சாங்கம் வாசித்தல்
இவை தவிர தஞ்சைப் பெரிய கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ஆகியவற்றிலும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசித்தல் மற்றும் சிறப்பு ஆராதனைகள் மிக விமரிசையாக நடைபெறும்.
==================