நெல்லையப்பர் கோவில்
நெல்லை நகரின் அடையாளமாக, ஆன்மீக தலமாக திகழ்வது புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் முக்கிய திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
ஆனித் திருவிழா
இந்த வகையில், ஆனித் திருவிழா இன்று தொடங்கியது. aதிகாலை 4:00 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு விஸ்வரூப தரிசனமும் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன.
சிறப்பு யாகங்கள்
கோயிலின் மகா மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் வழிபாடுகளுடன் தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம்
காலை 6:30 மணியளவில் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, பிரதான தங்கக் கொடிமரத்தில் முறைப்படி திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன.
28ம் தேதி மகா தேரோட்டம்
அனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 9ஆம் நாளான ஜூன் 28-ல் நெல்லையப்பர் கோயிலில் மகா தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் வழிபடுவார்கள்.
விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர் (பெரிய தேர்), காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களும் நான்கு ரத வீதிகளிலும் பவனி வரும்.
29ம் தேதி தீர்த்தவாரி
10ம் நாளான 29ம் தேதி தீர்த்தவாரியுடன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா நிறைவடைகிறது.
ஆனி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
10 நாட்களும் சுவாமி வீதியுலா
விழா நடைபெறும் 10 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள்.
ஆனித் திருவிழாவை காண வரும்.பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.
நெல்லை விழாக்கோலம்
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தொடங்கி விட்டதால், திருநெல்வேலி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
======================