Central Government allowed Ayyappa devotees going to Sabarimala to carry Irumudi bags on flights Google
ஆன்மிகம்

விமானத்தில் இருமுடியுடன் பயணிக்கலாம் : ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

Central Govt Allows Sabarimala Ayyappa Irumudi in Flights : சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி பைகளை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது.

Kannan

சபரிமலை - மண்டல பூஜை

Central Govt Allows Sabarimala Ayyappa Irumudi in Flights : உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை வழிபட வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்கிறார்கள்.

பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை வரும் பக்தர்கள் மண்டல விரதம் இருந்து இருமுடி சுமந்து வந்து, 18 படி ஏறி தரிசனம் செய்வது வழக்கம்.

பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு வரும் பக்தர்கள் காரிலோ, வேனிலோ, பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்வார்கள். விமானத்தில் பயணிக்கலாம் என்றாலும் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

திரவப்பொருள் கையில் கொண்டு செல்ல முடியாது

விமானத்தில் செல்பவர்கள் 100 மி.லி-க்கு மேல் திரவப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது. அதாவது இந்த பொருட்கள் லக்கேஜ் பிரிவில் வரவேண்டும். கையில் எடுத்துச் செல்லப்படும் திரவப் பொருட்கள் 100 மி.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஐயப்பனுக்கு கொண்டு செல்லப்படும் நெய்

ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லும் இருமுடியில் நெய் தேங்காய் இடம் பெற்று இருக்கும். இதில் உள்ள நெய் 100 கிராமுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கையில் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. லக்கேஜ் பிரிவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

இருமுடி - விமான பயணிகளுக்கு அனுமதி

இதை பரிசீலித்த மத்திய அரசு, இருமுடியின் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, விமானத்தில் இரு முடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்.

விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி

இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராமமோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்து செல்ல அனுமதிப்பது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

அதன்படி, சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடியை இன்று முதல் ஜனவரி 20ம் தேதி வரை விமானத்தில் தங்கள் கையில் கொண்டு செல்லலாம். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

========