The ceremony of Lord Kallazhagar entering the Vaigai River takes place tomorrow. source: google
ஆன்மிகம்

சித்திரைத் திருவிழா: மதுரை வந்தடைந்தார் கள்ளழகர்: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார் ! முழு விவரம்!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை நடக்கிறது. இன்று அதிகாலை மதுரை வந்தடைந்த அழகருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Kavitha prasanna

மதுரை சித்திரைத் திருவிழா

மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் இன்று காலை மதுரை வந்தடைந்தார்.

மதுரை வந்தடைந்தார் அழகர்

முன்னதாக மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் அளிக்க அழகர் மலையிலிருந்து நேற்று (ஏப். 29) மாலை கள்ளழகர் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த அழகர், இன்று (ஏப். 30) அதிகாலை மதுரை நகரை வந்தடைந்தார்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சிறப்பாக நடைபெற்ற எதிர்சேவை நிகழ்ச்சி

இன்று அதிகாலை 5.30 மணியளவில் மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் 'எதிர்சேவை' நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டாள் மாலை அணிவித்தல்

தொடர்ந்து இன்று இரவு 8.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு வரும் அழகர், அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொள்ளவிருக்கிறார்.

நாளைய முக்கிய நிகழ்வுகள்

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்

நாளை (மே 1) அதிகாலை 2 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் அழகர், அங்கிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கிப் புறப்படுவார்.

நல்லநேரம்

வைகை ஆற்றில் ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் அருகே நாளை அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வீரராகவப் பெருமாள் வரவேற்பு நிகழ்வு

தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

=====