cleanliness work underway at Sabarimala Ayyappa temple full swing, temple open tomorrow for Makaravilakku Puja 2025 Dates in Tamil 
ஆன்மிகம்

சபரிமலையில் தூய்மைப் பணிகள் : மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடைதிறப்பு

Sabarimala Makaravilakku 2025 & 2026 Dates in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவிலில் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது.

Kannan

சபரிமலை ஐயப்பன் கோவில்

Sabarimala Makaravilakku 2025 & 2026 Dates in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று நிறைவு பெற்றன. 41 நாட்கள் மண்டல பூஜை காலத்தில் சுமார் 35 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்து இருக்கலாம் எனத் தெரிகிறது. 27ம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றதும், அன்று இரவு நடை சாத்தப்பட்டது. ஐயப்பனுக்கு அணிவித்த தங்க அங்கி மீண்டும் ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் வைப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கற்பூர ஆழி அணைக்கப்பட்டு மண்டல கால சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தன.

மகரவிளக்கு பூஜை

இதனைத் தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக நாளை (டிச.30) மாலை 5 மணிக்கு மீண்டும்(Sabarimala Makaravilakku 2025) கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து வைப்பார். பின்பு வழிபாடுகள் இன்றி இரவு 11 மணிக்கு நடைசாத்தப்படும். தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை ) அதிகாலை 3 மணி முதல் மகரகால வழிபாட்டுக்கான பூஜைகள் தொடங்கும்.

ஜனவரி 14 மகர ஜோதி தரிசனம்

ஜனவரி 14-ம் தேதி மாலை 6.25 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு ஆபரணங்கள்(Sabarimala Makara Jyothi 2026 Date and Time in Tamil) அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை சந்நிதானத்தில் இருந்தபடி பக்தர்கள் தரிசிப்பர். உச்ச நிகழ்வுக்கான திரு ஆபரணப்பெட்டி பாலக பருவத்தில் ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தளம் அரச குடும்பத்தினரின் அரண்மனை வளாகத்தில் இருந்து ஜனவரி 11ம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

ஜன. 12ல் பேட்டைத் துள்ளல்

சாஸ்தா கோயிலில் இருந்து கிளம்பும் இந்த புனிதபயணம் 88கிமீ.தூரத்தில் உள்ள சபரிமலைக்கு பல்வேறு திருத்தலங்கள் வழியே செல்லும். 12ம் தேதி எருமேலியில பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும்.

பின்பு பெருவழிப்பாதை, பம்பை வழியே சந்நிதானத்தை வந்தடையும். தொடர்ந்து 14-ம் தேதி மகரகாலத்தின் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு நடைசாத்தப்பட்டு மகர மாதத்துக்காக (தை) 15-ம் தேதி அதிகாலையில் நடைதிறக்கப்படும்.

ஜன.19 வரை பக்தர்கள் தரிசனம்

19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பின்பு 20-ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசன நிகழ்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று நடைசாத்தப்பட்டு வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறும்.

சபரிமலையில் தூய்மைப் பணிகள்

நாளை கோயில் திருநடை திறக்கப்பட உள்ளதால் சந்நிதானம், பெரிய நடைப்பந்தல், நீலிமலை, சபரிபீடம், மணிமண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தூய்மைப் பணி நடைபெற்று வருகின்றன. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

=================