விடுமுறையையொட்டி வரிசையில் பக்தர்கள்
tirupati devotees today பொதுவாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசல் இருப்பது வழக்கம். ஆனால் விடுமுறையை முன்னிட்டு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது.
3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.
4.12 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை முன்னிட்டு, குவியும் பக்தர்களுக்கு வேதஸ்தானம் தரப்பில் தரிசனம் செய்வதற்கு ஏதுவான ஏற்பாடுகள் செய்து தருமாறு பக்தர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்கள் எளிமையான முறையில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பல வித முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.