elderly woman triumphed through her devotion, climbing 3,550 steps at the age of 116 to worship Lord Venkateswara AI generated
ஆன்மிகம்

”வயது 116, படிக்கட்டுகள் 3,550” : விடாமுயற்சியுடன் ஏறி பெருமாளை சேவித்த மூதாட்டி : வலைதளங்களில் வைரல், கௌரவித்த TTD...!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 116 வயதில் 3,550 படிக்கட்டுகளை ஏறிச் பக்தியால் வென்று இருக்கிறார் மூதாட்டி ஒருவர்.

Kannan

ஏழுமலையானின் தீவிர பக்தை

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவநீதம்மா. திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தையான இவர், இதுவரை பலமுறை திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே சென்று பெருமாளை சேவித்து இருக்கிறார்.

116 வயதிலும் உறுதி

அவருக்கு இப்போது வயது 116. நடப்பதில் தள்ளாட்டம் இருக்கிறது. எனவே, பேருந்தில் திருமலைக்கு சென்று மலையப்ப சுவாமியை வழிபடலாம் என உறவினர்கள் கூறிய போது, நவநீதம்மா, வழக்கம் போல நடந்து செல்லவே விரும்பினார்.

திருமலைக்கு 3,550 படிக்கட்டுகள்

எனவே, குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்தே சென்றனர். மொத்தம் 3,550 படிக்கட்டுகளை ஏறிச் சென்றால் மட்டுமே வேங்கடவனின் தரிசனம் கிடைக்கும்.

இதனால் அவருடன் வந்த அனைவரும் மூதாட்டியுடன் படியேறினர். சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் 3,550 படிகள் கொண்ட அலிபிரி மலைப்பாதையில் மூதாட்டி உட்பட அனைவரும் நடந்து சென்றனர். இதனை கவனித்த அவ்வழியாக நடந்து சென்ற சக பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தோடு, நவநீதம்மாவின் பக்தியை கண்டு பரவசத்தோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

கௌரவித்த தேவஸ்தானம்

இவை வைரலாக, மூதாட்டியின் பக்தி, திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 100 வயதை கடந்த பிறகு பெருமாள் மீது அவர் கொண்டிருக்கும் உறுதியான பக்தியை கண்டு மெய்சிலிர்த்த அதிகாரிகள், திருமலையில் நவநீதம்மாவுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

ஏழுமலையானை வழிபட்ட நவநீதம்மா

பின்னர் விஐபி தரிசனம் மூலம் பெருமாளை வழிபட நவநீதம்மா அழைத்து செல்லப்பட்டார். விளக்கொளியில் ஜெகத்ஜோதியாய் காட்சியளித்த மலையப்ப சுவாமியை கண்டு, ஆனந்த கண்ணீர் மல்க வழிபட்டார் அவர்.

வயதை விட பக்தியே முக்கியம்

ஏழுமலையானை படியேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வயது முக்கியமில்லை, மன உறுதி இருந்தால் போதும் என்பதை மூதாட்டி நவநீதம்மா தனது பக்தியின் மூலம் நிரூபித்துள்ளார்.

====================