Let's look steps to follow, as if you fast,worship Lord Murugan on Thaipusam, your wishes will come true Google
ஆன்மிகம்

நாளை தைப்பூசம்: முருகப் பெருமான் அருளைப்பெற இதையெல்லாம் செய்யுங்க

தைப்பூசம் அன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பதால், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.

Kannan

தைப்பூசம்

தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த முக்கியமான நாட்களின் தைப்பூசமும் ஒன்று. இந்த நாளில் முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூச விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

நாளை தைப்பூசம்

இந்த ஆண்டு பிப்ரவரி 01ம் தேதியான நாளை ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச பெருவிழா முருகப் பெருமான் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.

விடுமுறை நாளில் தைப்பூசம் வருவதால், விரதம் இருந்து வழிபடவும், கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்கவும் சிறப்பாக இருக்கும்.

வேண்டிய வரம் தரும் முருகன்

முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கிய தினத்தையே நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் அன்று முருகனை மனதார வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

தைப்பூச விரதப் பலன்

முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், தைப்பூசம் அன்று பலரும் விரதம் இருந்து வழிபடுவார்கள். சிலர் 48 நாட்கள், 21 நாட்கள் என்றும் தைப்பூச விரதம் இருப்பார்கள்.

ஆனால் அனைவராலும் இப்படி 48 நாட்கள் விரதம் கடைபிடிக்க முடியாது என்பதால், . ஒரு நாள் விரதம் இருந்தாலும், முருகனின் அருள் கிடைக்கும்.

பூச நட்சத்திர அதிபதி குரு பகவான்

27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும்.

தைப்பூசத்தில் தொட்டது துலங்கும்

தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள். எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்வது சிறப்பு. எதிர்பார்த்த பலன்கள் விரைவில் கிடைக்கும்.

விரதம் இருந்தால் வெற்றி

தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும்,

தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைப்பூச விரத முறைகள்

* தைப்பூசம் அன்று நாள் முழுவதும் உணவை தவிர்த்து உபவாசமாக விரதம் இருக்கலாம்.

* முழு உபவாசமாக இருக்க முடியாதவர்கள் உப்பு சேர்க்காத எளிய உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

* பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு தைப்பூச விரதம் இருக்கலாம்.

* பால் குடமாகவோ அல்லது பால் காவடியாகவோ எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

* முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட காவடிகள் சுமந்து சென்று வழிபடலாம்.

* காவடி எடுப்பவர்கள் குறைந்தபட்சம் 5 நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

* தைப்பூசம் அன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொள்ளலாம்.

* அப்படி செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்த படியே விரதம் இருக்கலாம்.

* தைப்பூச தினத்தன்று தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து முருக நாமங்களை மட்டுமே ஜபித்தபடி, தியானத்தில் ஈடுபடலாம்.

* கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்வது நல்லது.

========================