சபரிமலை பயணம்
ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கல்லையும், முள்ளையும் காலுக்கு மெத்தையாக கருதி மலையை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள். கடினமான காட்டுப் பகுதியை கடந்து வரும்போது ஐயப்பன் அவர்களுக்குக் காவலாக இருப்பார். ஆனால், பக்தர்கள் வீட்டை காப்பது யார்?
தேங்காய் உடைக்கும் சம்பிரதாயம்
அதற்கான தான் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் ஒரு தேங்காய் உடைத்து விட்டு கிளம்புவார்கள். அதேபோல, சபரிமலையில் இருந்து வீடு திரும்பியதும் தேங்காய் உடைத்த பின்பே வீட்டிற்குள் நுழைவார்கள்.
காவல் காக்கும் கருப்பண்ணசாமி
இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? ஐயப்பன் கருப்பண்ண சுவாமியிடம், ‘மாலைப்போட்டு, விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களை நான் பார்த்துக்கொள்வேன். அவர்களுடைய குடும்பத்தாரை பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு’ என்று கட்டளையிட்டார்.
தேங்காய் உடைத்து பக்தர்கள் புறப்பாடு
பக்தர்கள் யார் என்று நான் எப்படி தெரிந்து கொள்வது என்று கருப்பண்ணசாமி கேட்க, ‘சபரிமலைக்கு வீட்டில் இருந்து செல்வதற்கு முன்பு ஒரு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காய் சத்தத்தை கேட்டதுமே அவர்கள் வீட்டிலே போய் நீ காவலாக இருக்க வேண்டும்’ என்று ஐயப்பன் கூறினாராம்.
தேங்காய் உடைத்து பக்தர்கள் வருகை
‘எவ்வளவு நாள் நான் காவலாக இருக்க வேண்டும்?’ என்று கருப்பண்ணசாமி கேட்க, பக்தர்கள் சபரிமலையில் இருந்து அவர்கள் திரும்பி வந்ததும் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள். அதன்பிறகு நீ கிளம்பலாம்’ என்று ஐயப்பன் கூறினாராம்.
நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயம்
அதன்படி, சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சென்று திரும்பும்வரை வர்களின் வீட்டிற்கு காவலாக கருப்பண்ணசாமி இருப்பதாக நம்பிக்கை. அதன் அடிப்படியில் தான் சபரிமலைக்கு புறப்படும் போதும், திரும்பி வந்த பிறகு வீட்டிற்கு வெளியே தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.
ஐயப்பன் வழிபாட்டில் தேங்காய்
ஐயப்பன் வழிபாட்டில் தேங்காய் மிகவும் முக்கியமான பொருளாகும். இருமுடியில் நெய் தேங்காய் கட்டி எடுத்துச் சென்று தேங்காயை உடைத்து நெய்யை மட்டும் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பார்கள்.
இறைவனை அடையும் ஆன்மா
அதன்படி, தேங்காய் என்பது உடல், நெய் என்பது நம்முடைய ஆன்மா என்று பொருள். அந்த நெய்யை வைத்து ஐயப்பனை அபிஷேகம் செய்யும்போது நம்முடைய ஆன்மாவும் பரிசுத்தமாக இறைவனை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
மனிதனை குறிப்பிடும் தேங்காய்
தேங்காயில் எப்படி நார்கள் இருக்கிறதோ, அதேபோலதான் மனிதனின் இதயத்திலும் தசைநார்கள் உள்ளன. தேங்காயின் உள்ளே இருக்கும் நீரைப் போல மனிதனின் உள்ளேயுமே கலங்கலான எண்ணங்கள் அமைந்துள்ளள. இதை குறிப்பதற்காகத்தான் ஐயப்ப சுவாமி வழிபாட்டில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.