Masi Magam Rituals 2026: A grand celebration across Tamil Nadu! source: google
ஆன்மிகம்

Masi Magam Rituals 2026 : தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்! : தீர்த்தவாரி, சுவாமி வீதியுலா

Masi Magam Rituals 2026 in Tamil Nadu : இன்றைய மாசி மக திருவிழாவில் தமிழகம் முழுவதும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோலாகலமாக வழிபட்டனர்.

S Kavitha

Masi Magam Rituals 2026 :

2026 ஆம் ஆண்டிற்கான மாசி மகம் இன்றைய நாளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை 8.17 மணிக்கு தொடங்கிய நிலையில் மார்ச் 3 அதாவது நாளை காலை 8.07 மணியுடன் நிறைவடைகிறது. அதேபோல் பௌர்ணமி திதியானது நாளை (மார்ச் 3) மாலை 6.28 மணிக்கு தொடங்கி மார்ச் 4 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

மாசிமகம்

மாசி மாதத்தில் பௌர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தான் மாசிமகம் எனப்படுகிறது. இன்றைய நாளில் புனித நீராடல் இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.

மாசிமக நம்பிக்கைகள்

இன்றைய நாளில் விரதமிருந்து கடல் அல்லது புனித நதிகளில் தீர்த்தவாரி நீராடுவது, அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை நீக்கி, மனத்தூய்மை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

முன்னோர்களுக்கு உகந்த நட்சத்திரம்

மகம் நட்சத்திரம் முன்னோர்களுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அதனால் முன்னோர்களுக்கு தற்பணம் செய்வது, பித்ரு தோஷங்களை நீக்கி அவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

கிரக தோஷங்கள் நீங்க

சிம்ம ராசிக்காரர்கள் மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாசி மகத்தன்று வழிபடுவது கிரக தோஷங்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் பெற

குழந்தை இல்லாதவர்கள் மாசி மகத்தன்று விரதமிருந்து முருகப்பெருமானையும், அன்னை உமையவளையும் வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வறுமை நீங்க

புதிய முயற்சிகளைத் தொடங்க உள்ளவர்கள், குடும்ப ஒற்றுமை பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் தங்கள் வாழ்வில் வறுமை நீங்கிச் செல்வம் பெருக விரும்புவோர் இந்நாளில் புனித நீராடுவது மிகச் சிறந்தது.

புனித நீராடுதல்

மகாமகத்தன்று பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் முன் புனித நீராடுதல் செய்யப்படுகிறது. கடல் அல்லது புனித நதிகளில் தீர்த்தவாரி நீராடுவது சிறப்பானது.

தமிழகத்தின் பல பகுதிகளில் மாசி மகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், மாசிமகத்திற்கு பெயர்பெற்றது கும்பகோணம் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கும்பகோணம் மகாமகம் - வரலாறு

புராண இதிகாசங்களின் படி பிரம்மா, பிரளய காலத்தின் போது படைப்பு ஆற்றல்கள் அடங்கிய அமுத கும்பத்தை மிதக்க விட்டார். அது தங்கிய இடம் தான் கும்பகோணம்.

வேடன் வடிவில் சிவன்

சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் வந்து அந்த கும்பத்தை அம்பு எய்து உடைக்க, அதிலிருந்து அமுதம் வழிந்தோடி உருவானது தான் மகாமகக் குளம். அதனால் இந்த மகாமகக் குளத்தில் புனித நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் விலகி, வாழ்வு மேலோங்கும் என்பது நம்பிக்கை.

மகாமகக் குளத்தின் சிறப்பு

கங்கை, யமுனை, கோதாவரி உள்ளிட்ட ஒன்பது புனித நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள இந்த மகாமகக் குளத்தில் வந்து நீராடுவதாக ஓர் ஐதீகம் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் சிம்ம ராசியில் நுழையும்போது இது மகா மகமாக கொண்டாடப்படுகிறது. எனினும் சாதரண மாசிமகம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.

20 புனித கிணறுகளின் தீர்த்தம்

இந்த மகாமகக் குளத்தைச் சுற்றியுள்ள 20 புனிதக் கிணறுகளில் அதாவது வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம் முதலானவை தெளிக்கப்படும். இந்த புனித நீர் ஒருவரின் முற்பிறவி பாவங்களை நீக்கி மோட்சத்திற்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.

தீர்த்தவாரி

மகாமகத்தன்று கும்பகோணத்திலுள்ள புகழ்பெற்ற கோயில்களான ஆதி கும்பேஸ்வரர், சாரங்கபாணி போன்ற ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாகக் மகாமகக் குளத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.

அதன்பிறகு சுவாமிக்கு குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெறும்போதே பக்தர்களும் புனித நீராடுவர்.

அந்த வகையில் இன்றைய மாசி மக திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோலாகலமாக வழிபட்டனர்.