வைகுண்ட ஏகாதசி
Srirangam temple Vaikunta Ekadasi, ‘Paramapadavasal’ was opened and the processional deity Sri Namperumal passed through it :வைணவ ஆலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது சொர்க்கவாசல் திறப்பு. மாதங்களில் நான் மார்கழி என்றார் திருமால், அந்த மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
சொர்க்கவாசல் திறப்பு
வழக்கமாக மார்கழி வளர்பிறை ஏகாதசி நாளன்று வைணவ திருத்தலங்களில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
பகல் பத்து உற்சவம்
தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.
விண்ணை பிளந்த “ரங்கா, ரங்கா”
காலை 5.45 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள், ரங்கா.. ரங்கா.. கோஷம் விண்ணை முட்ட தரிசனம் செய்தனர். தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து வருகின்றனர். ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் இன்று தொடங்குகிறது.
பெருமாள் கோவில்கள் - வைகுண்ட ஏகாதசி
தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், வெகு சிறப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை, தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருத்தலங்களிலும், நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சொர்க்கவாசல் வழியாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் சென்று, மலையப்ப சுவாமியை சேவித்து அவரது அருளை பெற்று வருகின்றனர்.
====