பழனி முருகன் கோவில்
Palani Panchamirtham : திருப்பதிக்கு எப்படி லட்டு பிரசாதமோ, அதேபோன்று, பழனி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பழனி பஞ்சாமிர்தம்
மலை வாழை, தேன், நெய், பேரீச்சம் பழம், நாட்டு சார்க்கரை, ஏலக்காய், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம்(Palani Panchamirtham Ingredients in Tamil) தயாரிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் சேர்ப்பதில்லை.கெட்டு போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை.
புவிசார் குறியீடு :
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதல்படி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக 2019ம் ஆண்டு பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு(Palani Panchamirtham Geographical Indication) வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே என்பது அதன் சிறப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது.
டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம்
பழனி தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 470 கிராம் டப்பா ரூ.40க்கும், டின் ரூ.45க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, மலைக்கோயில், கிரிவலப்பாதை உள்பட 15 இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் 20,000 டப்பாக்கள் விற்பனை
சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் தினமும் ஒரு லட்சம் பஞ்சாமிர்தம் டப்பாகள் வரை விற்பனை இருக்கும்.
ஐயப்ப சீசன் - வருகை அதிகரிப்பு
சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கி விட்டதால், பழனி முருகன் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு எந்த நேரமும் பஞ்சாமிர்தம் கிடைக்கும் வகையில் தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனை மையங்கள் 24 மணி திறந்தே வைக்கப்பட்டுள்ளன.
விற்பனையில் வரலாற்று சாதனை
இந்தநிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 4.64 லட்சம் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2023ம் ஆண்டு ஒரு நாள் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 டப்பாக்கள் விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.
கடந்த 19ம் தேதி 1 லட்சத்து 98 ஆயிரத்து 480 பஞ்சாமிர்தம் டப்பாக்கள், 20ம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 940 பஞ்சாமிர்தம் டப்பாக்கள் எனச் சென்ற 2 நாட்களில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 420 பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகி இருக்கின்றன.
ரூ. 2.50 கோடி வருவாய்
இதன் மூலம் ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் நலன் கருதி லாப நோக்கமின்றி உற்பத்தி விலைக்கே பஞ்சாமிர்தம் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
====