பங்குனி அமாவாசை 2026
Panguni Amavasai 2026 Tharpanam Date : பங்குனி மாத அமாவாசை வரும் மார்ச் 18 ஆம் தேதி புதன்கிழமையன்று வருகிறது. இந்த அமாவாசையானது 24 மணி நேரத்திற்கும் குறைவானதாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பங்குனி அமாவாசை நேரம்
அதன்படி பங்குனி அமாவாசை மார்ச் 18 ஆம் தேதி காலை 08:28 மணிக்கு தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி காலை 07: 29 மணிக்கு நிறைவடைகிறது.
பங்குனி அமாவாசை சிறப்புகள்
பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்
பங்குனி அமாவாசை அன்று அதிகாலை எழுந்து புனித நதிகள் அல்லது கடலில் நீராடி, முன்னோர்களை மனதில் நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடுவது தர்ப்பணம் கொடுப்பது மிகவும் முதன்மையானது.
குலதெய்வ வழிபாடு இன்றியமையாதது
எல்லா மாதங்களிலும் குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்தது, சிறந்தது தான் என்றாலும் பங்குனி மாதம் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்தது .
அதனால் பங்குனி மாதத்தில் வரும் அமாவாசை அன்று குலதெய்வத்திற்குப் படையலிட்டு வணங்குவது, குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக செல்வத்தைப் பெருக்கும் என்பது ஐதீகம்.
ஏழை, எளிய மக்களுக்கு தானம் செய்யுங்கள்
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது அல்லது ஆடைகளை தானம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி அமாவாசை விரதம்
பங்குனி அமாவாசை அன்று பகல் முழுவதும் உணவு தவிர்த்து அல்லது ஒருபொழுது விரதம் இருந்து, மாலை நேரத்தில் முன்னோர்களை நினைத்து விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானது, மேலும் வாழ்வில் வளங்களைப் பெற்றுத் தரும்.
தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்
அமாவாசை நாள் முழுவதும் இருந்தாலும் பகல் 12 மணிக்குள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் காலை 08:30 மணி முதல் நண்பகல் 12: 30 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. மாலை நேரத்தில் அல்லது சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் கொடுப்பதை தவிர்த்து விட் வேண்டும்.
புனித நீராட உகந்த தலங்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பங்குனி அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் வழிபட வேண்டிய தலங்களில் முதன்மையானது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்.
இங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.
பவானி சங்கமேஸ்வரர் கோவில்
காவிரி, பவானி, அமுதநதி சங்கமிக்கும் இடத்தில் நீராடி வழிபாடு செய்வது கங்கையில் நீராடுவதற்குச் சமம் என்பதால் எப்போதும் பக்தர்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கடலோரத்தில் தர்ப்பணம் செய்து முருகப் பெருமானை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
இங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
திலதர்ப்பணபுரி முத்தீஸ்வரர் கோவில்
ஸ்ரீ ராமர் தன் தந்தைக்காகத் தர்ப்பணம் செய்த தலம் என்பதால் இத்தலத்தில் பித்ரு காரியங்கள் செய்வது மிகுந்த பலன் தரும்.
சென்னையில் பரிகாரத் தலங்கள்
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் மற்றும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் குளம் போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வழிபடலாம்.