people of Karaikudi have undertaken a foot pilgrimage to the Palani Murugan Temple on the occasion of Thaipusam. This has been going on for 420 years. Source : Google Images
ஆன்மிகம்

தைப்பூச காவடிகளுடன் ”காரைக்குடி நகரத்தார்”: 420 ஆண்டு புனித பயணம்

Palani Thaipusam Festival 2026 : தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோவிலுக்கு காரைக்குடி நகரத்தார் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இது 420 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

Kannan

பழனியில் தைப்பூச விழா

Palani Thaipusam Festival 2026 : முருகனுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் அன்று கொண்டாடப்படும் விழா தான் தைப்பூசத் திருவிழா. பழனி முருகன் கோவிலில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

காரைக்குடி நகரத்தாரின் பாத யாத்திரை

லட்சக் கணக்கான முருக பக்தர்கள் முருகப் பெருமானுக்கு பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். அந்த வகையில் காரைக்குடி நகரத்தார் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து காவடி செலுத்துவது சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகவே ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

420 ஆண்டுகளாக காவடி யாத்திரை

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இருந்து கடந்த 26ம் தேதி 352 காவடிகளுடன் நகரத்தார் பழநி நோக்கி புறப்பட்டனர். 420 ஆண்டுகளாக தொடர்ந்து பழநியில் நடைபெறும் தைப்பூசவிழாவிற்கு குன்றக்குடியில் இருந்து காவடி சுமந்து பாதயாத்திரையாக பழநி நோக்கி செல்வது அவர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறார்கள்.

முன்னோர் வழியில் புனித பயணம்

முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்றும் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. செட்டிநாடு பகுதியில் உள்ள நகரத்தார்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு, குன்றக்குடியில் ஒன்றாக இணைந்து, அங்கிருந்து புறப்பட்டு சுமார் 100 மைல் தூரம் நடந்து பழனியை அடைகின்றனர்.

முருக பக்தர்களுகளுக்கு பொதுமக்கள் மரியாதை

முன்னோரின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி பகுதிகளை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர். காவடி எடுத்து வரும் நகரத்தாரை,

பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று வணங்கி வழியனுப்பினர்.

நடந்தே ஊர் திரும்பும் நகரத்தார்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநியை சென்றடையும் இவர்கள் பிப்ரவரி 1-ம் தேதி பழனியில் நடைபெறவுள்ள தைப்பூச விழாவில் பங்கேற்று முருகனுக்கு காவடியை செலுத்தி வழிபடவுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பிறகு நடந்தே ஊர் திரும்புவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

காவடி வகைகள்

சர்க்கரை காவடி (இது தனிச்சிறப்பு), பன்னீர் காவடி, பால்காவடி போன்றவை எடுத்துச் செல்லப்படுகின்றன.

நேர்த்திக்கடன்

தங்களது பாவங்களைப் போக்கி, முருகனின் அருளைப் பெற இந்த நீண்ட பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

பயண முறை

மேல்சட்டை அணியாமல், பாதயாத்திரையாக நடந்து, கிடைக்கும் இடத்தில் உண்டு, சாலையோரங்களில் தங்கி பக்தி உணர்வுடன் இந்த யாத்திரையை நகரத்தார் மேற்கொள்கிறார்கள்.

பங்குனி உத்திர விழா

தைப்பூசம் மட்டுமின்றி, சில நகரத்தார் பிரிவினர் பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்து சென்று, பழனி முருகனை வழிபடுகிறார்கள்.

நகரத்தார் காவடி யாத்திரை என்பது வெறும் வழிபாடாக இல்லாமல், ஒரு கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. இதன் காரணமாக 420 ஆண்டுகள் பெருமை கொண்ட இந்த பாதயாத்திரை, இன்றும் தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

=================