பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புரட்டாசி :
Purattasi 2025 Start And End Date in Tamil : ’மாதங்களில் நான் மார்கழி’ என மாலவன் தெரிவித்து இருந்தாலும், புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டிற்கும், புண்ணிய பலன்களை பெறுவதற்கும் உரிய மாதமாகும். வைகுண்ட பதவியை பெறுவதற்கும், மோட்சத்திற்கான வழியை அடைவதற்கும் உதவக் கூடிய மாதம் இது. பெருமாளின் அருளால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு புரட்டாசி மாத வழிபாடு கைகொடுக்கும்.
தனித்துவம் மிக்க புரட்டாசி :
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சிறப்பு இருந்தாலும், ஒரு சில மாதங்கள் மட்டும் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமான புரட்டாசி( Auspicious Month Of Purattasi), பாவங்கள், துன்பங்களை நீக்கி, மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் கொடுக்கும் வல்லமை பெற்றது. புரட்டாசி மாதம், சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதம். எனவே இதை கன்னி மாதம் என்றும் அழைப்பார்கள்.
புரட்டாசி மூன்று விதமான வழிபாடுகள் :
புரட்டாசி மாதத்தின் மகத்துவம் என்னவென்றால், பெருமாள் வழிபாடு, அம்பிகை வழிபாடு, முன்னோர் வழிபாடு மூன்றும் இணைந்ததாகும்.
அதாவது சனிக்கிழமை வழிபாடு, மகாளய பட்சம், நவராத்திரி ஆகியவற்றை முறையாக செய்வதால் தெய்வ அருளும், முன்னோர்களின் ஆசிகளும் பரிபூரணமாக கிடைக்கும். குறிப்பாக புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் அனைத்து இன்னல்களும் நீங்கி, வளமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
பெருமாளுக்கு உகந்த புதன், சனிக்கிழமை :
இந்த ஆண்டு ( 2025 ) புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி புதன்கிழமை(Purattasi 1 2025 Start Date) பிறக்கிறது. மாதத்தின் முதல் நாளே பெருமாளுக்குரிய ஏகாதசி வழிபாட்டோடு தான் துவங்குகிறது. பொதுவாக புரட்டாசி புதன் கிரகத்திற்குரிய மாதமாகும். புதனுக்குரிய அதி தேவதை திருமால். எனவே, புதன்கிழமையில் பெருமாளை வழிபடுவதும், புரட்டாசியில் பெருமாளை வழிபடுவதும் சிறப்பானது. இந்த ஆண்டு புதன் பகவானுக்குரிய புதன்கிழமையில், புரட்டாசி மாதம் தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக வைணவர்கள் கருதுகின்றனர்.
பெருமாளை சரணடைந்தால், துன்பங்கள் நீங்கும் :
எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட காக்கும் கடவுளான பெருமாளை, புரட்டாசி மாதத்தில் சரணடைந்தால், துன்பங்கள் கதிரவன் ஒளிபட்டு நீங்கும் பனி போல காணாமல் போகும். எந்த மாதமாக இருந்தாலும், சனிக்கிழமையில் விரதம்(Purattasi Saturday Viratham 2025 Tamil) இருந்து, பெருமாளை வழிபடுவது நல்லது. மற்ற மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட முடியாமல் போனாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபட்டால் பல மடங்கு அதிகமான பலன் கிடைக்கும். பெருமாளின் அருளும், சனி பகவானின் அருளும் கிடைக்கும்.
மேலும் அப்பிடிக்க : ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா: பங்கேற்க ஆர்.என்.ரவி அழைப்பு
ஏழுமலையானை வழிபட்டால் இருமடங்கு பலன் :
புரட்டாசி மாதம், பெருமாள் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதால்(Tirupati Balaji Temple) இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் மட்டுமின்றி அனந்த பத்மநாப விரதம், ஏகாதசி விரதங்களும் சிறப்பு மிக்கவையாகும். இந்த ஆண்டு புரட்டாசியின் முதல் நாளிலேயே ஏகாதசி விரதம் வருவது மிகவும் விசேஷம். இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை படைத்து வழிபடுவதும் மிகவும் சிறப்பு. புரட்டாசி மாதத்தின் முதலில் பெருமாளுக்கு மாவிளக்கு, தளிகை போட்டும் வழிபடலாம். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை மனதார நினைத்து வழிபடலாம். பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும் பெருமாளின் பரிபூரணமான அருளை நமக்கு பெற்றுத் தந்து, வாழ்வை வளமாக்கும். எனவே, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை சேவித்து அவரது அருளை பெறுவோமாக.
====