Reason Behind Tiruchendur Soorasamharam 2025 Celebrations on Lord Murugan Victory Over Demon Soorapadma Read Full Story in Tamil 
ஆன்மிகம்

முருகனின் சூரசம்ஹாரம்: மகாபாரதம், கந்தபுராணம் சொல்லும் கதைகள்

Tiruchendur Soorasamharam 2025 Reason in Tamil : திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்

Kannan

கந்த சஷ்டி விழா

Tiruchendur Soorasamharam 2025 Reason in Tamil : ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெறுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக கணக்கான பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு இடையே சூரனை முருகப் பெருமானை வதம் செய்வார்.

முருக பக்தர்கள் கடும் விரதம்

கந்த சஷ்டி விழாவிற்காக முருக பக்தர்கள் அனைவரும் ஆறு நாள் கடும் விரதம் இருந்து நேர்த்திக் கடனை முடித்துக் காட்டுவர். அப்படிப்பட்ட இந்த கந்த சஷ்டி விழா உருவான கதையை பார்க்கலாம்.

காசிபன் மகன் சூரபத்மன்

மக்களை படைக்கும் பிரம்மனுக்கு தட்சகன், காசிபன் என்ற இரண்டு பிள்ளைகள். காசிபன் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்து வரங்களை பெற்றான். அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை என்னும் அசுரப் பெண்ணுடன் இணைந்து, சூரபத்மன், சிங்கமுகமுடைய சிங்கன், யானை முகமுடைய தாரகன், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பிள்ளைகளை பெற்றான் காசிபன்.

தவமிருந்து வரங்களை பெற்ற சூரபத்மன்

தந்தை காசிபன் ஆலோசனைப்படி, பிள்ளைகளும் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டங்களை அரசாளவும் வரம் பெற்றனர். சாகாவரம் வேண்டும் சூரபத்ரன் கேட்க அதற்கு சிவபெருமான் பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்பதால், எந்த வகையில் அழிவு வர வேண்டும் என்பதை தர முடியும் என்றார். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என வரம் பெற்றான் சூரபத்மன்.

தேவர்களை சிறை வைத்த சூரபத்மன்

வரங்களை பெற்று விட்டதால், கர்வத்தின் உச்சத்திற்கு சென்ற சூரபத்மன், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையில் அடைத்தான். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டனர்.

முருகப்பெருமான் அவதாரம்

சிவபெருமான் தனது ஆறு நெற்றி கண்களை திறக்க அதில் தோன்றிய 6 தீப்பொறிகளை வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக தோன்றி, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டன.

தாயிடம் வேல் பெற்ற முருகன்

ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி கட்டியணைக்க அவை ஆறு தலை மற்றும் இரண்டு கைகள் உடைய மேனியாக முருகப் பெருமானாக வடிவம் பெற்றது. தாய் பார்வதி தேவியிடம் வேலினை வாங்கிக் கொண்டு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து சூரபத்திரனை வதம் செய்ய புறப்பட்டார் முருகன். இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாககந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது.

மகாபாரதம் கூறும் கந்தசஷ்டி

சூரபத்திரனை வதம் செய்யும் நிகழ்வைத் தவிர்த்து வேறு இரண்டு காரணங்களுக்காகவும் கந்த சஷ்டி விழா நடைபெறுவதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. முனிவர்கள் உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்திய போது, குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஆறாம் நாளில் ஒன்றாக்கிய போது,முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என்கிறது மகாபாரதம்.

கந்தபுராணம் கூறும் கந்தசஷ்டி

கச்சியப்ப சிவாச்சாரியார், முருகனின் அருள் வேண்டி ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து நோன்பு இருந்தார். தேவர்களும், அசுரங்களை வெல்லும் சக்தியை பெறுவதற்காக முருகப் பெருமானை நினைத்து 6 நாட்கள் வழிபட்டனர். முருகனும் அவர்களுக்கு அருள்பாலித்தார். இதை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்று கந்தபுராணத்தில் கூறுகிறது.

மேலும் படிக்க : திருச்செந்தூரில் 27ம் தேதி சூரசம்ஹாரம் : 5 லட்சம் பேர் பங்கேற்பு

எப்படி ஆயினும் தீமையை அழிக்க இறைவன் எடுத்த அவதாரம், அதன்மூலம் தேவர்களுக்கு கிடைத்த பயன், உலக மக்கள் பெற்ற நன்மை, முருகப் பெருமான் அருள் பாலித்ததே கந்தசஷ்டி விழாவாகும்.

==============