தரிசக்காமல் திரும்பி செல்லும் பக்தர்கள்
Sabarimala Ayyappa Temple Online Registration End Date 2025 : சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. நடை திறந்த கடந்த 16ம் தேதி முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். இதனால், பம்பையிலேயே பக்தர்கள் 10 மணிநேரத்திற்கு மேல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏராளமானோர் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது.
தேவசம் போர்டு தலைவர் உறுதி
இதைத் தொடர்ந்து போதிய வசதிகள் ஏற்படுத்தாத திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, சிலவற்றை மாற்றும்படியும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார், விரைவாக திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 25 க்கு பிறகு முன்பதிவு செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,கோவில் தேவசம் தரப்பில் சில அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 3 நாட்களாக தினமும் சராசரியாக 74 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பக்தர்கள் தற்போது சிரமமின்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டிசம்பர் 25ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ஆன்லைன் முன்பதிவை டிசம்பர் மாதத்திற்கு பிறகு முயற்சி செய்யும்படி, ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.