சபரிமலை ஐயப்பன் தரிசனம்
Sabarimala Temple opened for Makaravilakku festival :
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. சிறப்பாக நடைபெற்ற மண்டல பூஜைகளின் போது இருமுடி கட்டி வந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தனர்.
தினமும் ஆயிரக் கணக்கானோர் வருகை
தொடக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்ட நிலையில் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து தரிசனம் மேற்கொண்டு வந்த நிலையில் மண்டல பூஜைகள் கடந்த சனிக்கிழமை நிறைவு பெற்றது.
மகர விளக்கு பூஜைகள்
அன்றிரவு 10 மணிக்கு வழக்கம்போல ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டு நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்
தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் திருநடையை திறந்து வைத்தார். சன்னிதானத்தின் ஆழிக்குண்டத்தில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு பூஜைகள் தொடங்கின. அதன் பின்னர் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பக்தர்கள் அனுமதி
மகர விளக்கு காலத்து தரிசனத்தை பொறுத்தவரை, சன்னிதானத்தில் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.
ஜன.14 - 30,000 பேர் அனுமதி
மகர விளக்கு பூஜை தினமான ஜனவரி 14ஆம் தேதி சுமார் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
30 லட்சம் பேர் தரிசனம்
மண்டல பூஜை காலத்தில் சுமார் 36 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டனர். இவர்களில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக 3 லட்சத்து 83 ஆயிரம் பேர் தரிசனம் செய்து இருக்கிறார்கள்.
ரூ.332 கோடி காணிக்கை
பக்தர்கள் செலுத்திய வகையில் காணிக்கை மற்றும் இதர வருவாயாக சுமார் 332 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனத்துக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு சபரிமலை சீசன் வருமானம் சுமார் 350 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகர விளக்கு பூஜைகள் தொடங்கியதை அடுத்து, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஜனவரி 14ம் தேதி மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
===