திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா நாளை சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க லட்சக் கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களின் வசதிக்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் 4 புதிய சிற்றுந்து சேவைகளை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் அவர் பட்டியலிட்டு வெளியிட்டு இருக்கிறார்
கட்டணமில்லா பேருந்து வசதி
ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு பக்தர்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் வகையில் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
கழிப்பறை மற்றும் குளியலறைகள்
325 நிரந்தர கழிப்பறைகள், 300 தற்காலிக கழிப்பறைகள் மற்றும் 69 நிரந்தர குளியலறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு
384 நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 149 தற்காலிக நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வசதிகள்
23 குடிநீர் பந்தல்கள், 68 குடிநீர் குழாய் இணைப்புகள், 10 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காவல் மற்றும் தீயணைப்புத்துறை
140 தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் வீரர்கள், 5 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை சார்பில் முதல் நான்கு திருவிழா நாட்களுக்கு 700 காவலர்களும், ஐந்து மற்றும் ஆறாம் திருவிழா நாட்களில் 5,000 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடல் பகுதியில் 30 மீனவர்கள் தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ வசதிகள்
கோயிலில் முதலுதவி மையம், 6 இடங்களில் அரசு மருத்துவ முகாம்கள், 2 தனியார் மருத்துவ முகாம்கள் மற்றும் 7 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ORS கரைசல் வழங்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பாதுகாப்பு வசதிகள்
கடற்கரைப் பகுதிகளில் 13 ஒளிக்கோபுரங்கள், 8 கண்காணிப்புக் கோபுரங்கள், 11 தற்காலிகக் கொட்டகைகள் மற்றும் 5 நிரந்தரத் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அன்னதானம் மற்றும் உணவு வசதிகள்
திருக்கோயிலில் நாள் முழுவதும் 11,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், தன்னார்வலர்கள் மூலம் 15,000 பேருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், பொங்கல் மற்றும் பிஸ்கட் வழங்கவும், விரதமிருக்கும் பக்தர்களுக்கு பால் மற்றும் பழங்கள் வழங்கவும், தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பான ஒருங்கிணைப்பு பணி
முருகப்பெருமானின் புகழையும் உலகெங்கும் எடுத்துச் செல்வோம்
கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் சிறப்பான தரிசன அனுபவத்தை வழங்க அனைத்து துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, தமிழர்களின் ஆன்மிகப் பெருமையையும் முருகப்பெருமானின் புகழையும் உலகெங்கும் எடுத்துச் செல்வோம் என அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
===========================